கோவையை சேர்ந்த விஞ்ஞானி ஜி.டி.நாயுடு-வின் வாழ்க்கை வரலாறு நடிகர் மாதவன் நடிப்பில் திரைப்படமாக உருவாகிவருகிறது. இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள முக்கிய விஞ்ஞானிகளில் முக்கியமானவர் கோவையை சேர்ந்த ஜி.டி.நாயுடு. தமிழ் வழியில் 4 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த ஜி.டி.நாயுடு, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல்ஸ், விவசாயம் உள்ளிட்ட துறைகளில் ஏராளமான கருவிகளை கண்டுபிடித்து சாதனைபடைத்தவர்.
ஷேவிங் ரேசர், ஜுசர், உருளைக்கிழங்கு தோல் எடுக்கும் கருவி, கீ வால் கிளாக், ரேடியோகிராம், தமிழ் டயல் ரேடியோ, கட்டட கலவை, எலக்ட்ரிக் மோட்டார், கால்குலேட்டர், பிளேடு, ஆட்டோமெடிக் டிக்கெட் மெஷின் என அவரின் கண்டுபிடிப்பு பட்டியல் மிக நீளம். தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத காலக்கட்டத்தில், பல்வேறு கண்டுபிடிப்புகளை பொதுமக்களுக்காக வழங்கிய ஜி.டி.நாயுடு குறித்து இளம் தலைமுறையினரிடையே எடுத்துச் சொல்லும் வகையில், அவரது வாழ்க்கை வரலாறு குறித்து திரைப்படம் எடுக்கப்படுகிறது.
இந்த படத்தில் ஜி.டி.நாயுடுவாக நடிகர் மாதவன் நடிக்கிறார். மீடியா ஒன் குளோபல் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ள பெயரிடப்படாத இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழக விஞ்ஞானி ஜி. டி நாயுடு நாயுடுவின் சுயசரிதையையும், அவரது சாதனைகளையும் தழுவி இந்தத் திரைப்படம் உருவாக்கப்படவுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
அந்த போஸ்டரில், பழைய காரை பார்த்தபடி ஜி.டி.நாயுடு நின்பதுபோன்று உள்ளது. இந்தப் போஸ்டரில் மாதவன் பெயர் மட்டுமே இடம்பெற்றுள்ளது. அளப்பரிய கண்டுபிடிப்புகளால் கோவை நகருக்கு பெருமை சேர்த்த ஜி.டி.நாயுடு-வின் வரலாறு திரைப்படமாக உருவாவதற்கு கோவை மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.