ஏப்ரல்.24
தமிழகம் முழுவதும் ஜி-ஸ்கொயர் நிறுவனம் தொடர்புடைய அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்திவருகின்றனர். கோவை,சென்னை உட்பட 50க்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்.
சென்னையை தலைமையிடமாக கொண்டு திருச்சி, கோயம்புத்தூர் மற்றும் பெங்களூர், ஹைதரபாத் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஜி ஸ்கொயர் குரூப்ஸ். குறிப்பாக இந்த நிறுவனம் நிலங்களை வாங்கி குடியிருப்புகளாக கட்டி விற்பனை செய்வதையும், நிலங்களாகவும் விற்பனை செய்வதையும் தொழிலாக செய்து வருகின்றது. சமீப காலமாக பல்வேறு திட்டங்களை இந்த நிறுவனம் முடித்து கொடுத்ததால் பிரபல நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
மேலும் இந்த கட்டுமான நிறுவனம் திமுக முதல்வர் ஸ்டாலினின் மருமகனான சபரீசனுக்கு நெருக்கமான நிறுவனம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டி வந்தார். சமீபத்தில் திமுக அமைச்சர்கள் மற்றும் பிரமுகர்களின் சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிட்டபோது, திமுக குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமான ஜி ஸ்கொயர் குரூப்ஸ் நிறுவனம், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் 38,827 கோடி வருமானத்தை ஈட்டியிருப்பதாக ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தது சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இன்று தமிழகம் முழுவதும் ஜி ஸ்கொயர் குரூப்ஸ் நிறுவனத்துக்கு தொடர்புடைய 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்திவருகின்றனர். திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினரை பாதுகாப்பிற்கு அழைத்து வரப்பட்டு 100க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில் ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் தலைமையிட அலுவலகமான சேத்துப்பட்டு, ஆழ்வார்ப்பேட்டை உள்ளிட்ட இடங்களிலும், முதல்வரின் மருமகனான சபரீசனின் ஆடிட்டர் சண்முகராஜ் திருமங்கலம் வீட்டிலும், நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் இருந்து வரும் பாலா என்பவரின் ஈ.சி.ஆர் வீட்டிலும், அண்ணா நகரில் உள்ள அண்ணா நகர் சட்டமன்ற உறுப்பினர் மோகன் மற்றும் அவரது மகன் கார்த்திக் வீட்டிலும், கொடுங்கையூர் என பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
குறிப்பாக சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் குறைந்த விலைக்கு நிலங்களை கையகப்படுத்தி கூடுதல் விலைக்கு இந்த நிறுவனம் விற்பனை செய்து வருவதாகவும், அதன் மூலம் சம்பாதிக்கும் பணத்தை முறையாக வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் கடந்த 2019ஆம் ஆண்டு ஏற்கனவே ஜி ஸ்கொயர் நிறுவனம் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு முக்கிய ஆவணங்களை கைப்பற்றிய நிலையில், அதை வைத்தும், தற்போதைய குற்றச்சாட்டின் அடிப்படையிலும் சோதனை மேற்கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் கொரோனா காலகட்டத்தின் போது ஜீ ஸ்கொயர் நிறுவனம் அதிகப்படியான பண பரிவர்த்தனைகளில் ஈடுபட்டதாக வருமானவரித்துறையினர் விசாரணையில் தெரியவந்திருப்பதால் சோதனை மேற்கொள்ளப்படுவதாகவும் மற்றொரு தரப்பு தகவல் தெரிவிக்கிறது.
ஜி-ஸ்கொயர் நிறுவனத்தில் நடைபெறும் சோதனை முழுமையாக நிறைவடைந்த பின்பே வருமான வரி ஏய்ப்பில் அந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளதா என்பது தெரியவரும் என வருமானவரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.