மே.21
ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நடைபெற்றுவரும் ஜி7 உச்சிமாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திரமோடி 10 அம்சத் திட்டத்தை வெளியிட்டார்.
ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரில் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 7 நாடுகளின் அமைப்பான ‘ஜி-7’ அமைப்பின் உச்சி மாநாடு கடந்த 19ம் தேதி தொடங்கியது.
இதில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் மேனுவல் மேக்ரான், ஜெர்மனி பிரதமர் ஒலாப் ஸ்கோல்ஸ், இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி, ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் ஐரோப்பிய யூனியன் கமிஷன் தலைவர் உர்சுலா, ஐரோப்பிய யூனியன் கவுன்சில் தலைவர் சார்லஸ் மிச்சேல், ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸ், இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ ஆகியோர் பங்கேற்றனர்.
மாநாட்டின் 2-வது நாள் நிகழ்ச்சியில் இந்திய பிரதமர் நரேந்திரமோடி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, சுகாதாரம், ஆரோக்கிய உணவு பாதுகாப்பு மற்றும் பல துறைகள் தொடர்பாக எழும் சவால்களை எதிர்கொள்வதும் முக்கியம். உணவு, சுகாதாரம், வளர்ச்சி ஆகியவற்றில் 10 அம்ச திட்டங்களை நாம் பின்பற்றியாக வேண்டும். வளர்ச்சிக்கும், ஜனநாயகத்துக்கும் இடையேயான பாலம்போல தொழில் நுட்பம் உள்ளது. இயற்கை வளங்களை முழுமையாகப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டிய தேவை உள்ளது. நுகர்வோர் சார்பால் கவரப்பட்ட வளர்ச்சி மாதிரி மாற்றப்பட வேண்டும்.
உலகின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்கள், அதிலும் குறிப்பாக சிறு விவசாயிகள் நமது முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையை உள்ளடக்கிய உணவு முறையை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். உலகளாவிய உர சங்கிலிகள் பலப்படுத்தப்பட வேண்டும். இதில் உள்ள அரசியல் தடைகள் அகற்றப்பட வேண்டும். உர வளங்களை ஆக்கிரமித்து வருகிற விரிவாக்க மனநிலையை நிறுத்த வேண்டும். உணவுகள் வீணாவதைத் தடுப்பது நம் அனைவரின் கூட்டுப்பொறுப்பு.
உலகம் எங்கும் உள்ள உரங்களுக்கு மாற்றாக புதிய இயற்கை வேளாண்மை மாதிரியை நம்மால் உருவாக்க முடியும். டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பலனை நாம் உலகமெங்கும் உள்ள விவசாயிகளுக்கு எடுத்துச்செல்ல வேண்டும். ஊட்டச்சத்து, காலநிலை மாற்றம், தண்ணீர் பாதுகாப்பு, உணவு பாதுகாப்பு ஆகியவற்றின் சவால்களை சிறுதானியங்கள் ஒரே நேரத்தில் தீர்க்கும். இது தொடர்பான விழிப்புணர்வை நாம் உருவாக்க வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
இந்த உரையின்போது, சிறிய விவசாயிகள் உள்ளிட்ட மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களை பாதுகாக்க எல்லா அம்சங்களையும் உள்ளடக்கிய உணவுதானிய சாகுபடி முறைகளை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சத் திட்டங்களை வெளியிட்டார்.