ஏப்ரல்.27
ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திரமோடி மே மாதம் ஜப்பான் செல்கிறார். ஹிரோஷிமா நகரில் மே 19-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை நடைபெறும் வளர்ந்த நாடுகளின் ஜி7 உச்சி மாநாட்டில் அவர் கலந்துகொள்கிறார்.
இந்தியாவுக்கு கடந்த மாதம் வந்த ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, ஜி7 மாநாட்டுக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி, பிரதமர் மோடி மாநாட்டில் பங்கேற்கிறார். இதில், அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் உள்ளிட்ட தலைவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
குவாட் மாநாடு ஜப்பான் பயணத்தை முடித்தபிறகு, ஒரு பசிபிக் தீவு நாட்டுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொள்கிறார். அங்கிருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு செல்லும் மோடி, மே 24-ந் தேதி, ‘குவாட்’ தலைவர்கள் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்த அமைப்பு ‘குவாட்’ என்று அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனிஸ், தலைமையில் நடைபெறும் குவாட் மாநாட்டில், அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
ஜி7, குவாட் ஆகிய இரு மாநாடுகளுக்கு வரும் தலைவர்களை பிரதமர் மோடி தனித்தனியாகவும் சந்தித்து பேசவுள்ளார். வெள்ளை மாளிகை அறிக்கை ‘குவாட்’ மாநாடு நடத்தப்படுவதை ஆஸ்திரேலிய பிரதமர் அலுவலகம் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்த நிலையில், பிரதமர் மோடியின் பயணம் குறித்து மத்திய அரசு சார்பில் அதிகாரபூர்வ அறிக்கை எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.