June 05, 2023
காங்கிரஸ் கட்சி கர்நாடக மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில் வரும் ஜூலை ஏழாம் தேதி மாநிலத்திற்கு புதிதாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என முதல்வர் சித்தராமையா இன்று அறிவித்துள்ளார்.
பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள ஹெலிகாப்டரில் தாவண்கரே மாவட்டத்திற்கு சென்ற முதல்வர் சித்தராமையா அங்கு பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, “வரும் ஜுலை மூன்றாம் தேதி சட்டமன்றத்தில் பட்ஜெட்டில் கூட்டத்தொடர் துவங்கும். அதன்பிறகு ஜுலை ஏழாம் தேதி மாநிலத்திற்கு என புதிதாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். தேர்தல் சமயத்தில் நாங்கள் அளித்திருந்த தேர்தல் வாக்குறுதிகளை அமல்படுத்தும் வகையில் புதிய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.” என்றார்.
காங்கிரஸ் ஆட்சி அமைந்த பிறகு அவர்கள் அளித்திருந்த முக்கிய தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற கடந்த அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு திட்டங்கள் அமல்படுத்தும் தேதியையும் முதல்வர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த திட்டங்களை நிறைவேற்ற தேவையான நிதியை ஒதுக்கீடு செய்ய ஏதுவாக புதிய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட்டை நிதித் துறையை தன்வசம் வைத்திருக்கும் முதல்வர் சித்திராமையா தாக்கல் செய்கிறார்.
கர்நாடக மாநிலத்தில் இதுவரை 13 முறை சித்தராமையா பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். இம்முறை அவர் தாக்கல் செய்வது 14வது பட்ஜெட் என்பதும் இதுவே கர்நாடக மாநிலத்தில் தனிநபர் ஒருவர் அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்வதும் குறிப்பிடத்தக்கது.