June 09, 2023
வரும் ஜூன் 12-ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பதை முன்னிட்டு இன்று முதல் 3 நாட்களுக்கு, சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
”2023-ம் ஆண்டு பள்ளிகளுக்கான கோடைக்கால விடுமுறை முடிந்து வரும் ஜூன் 12-ம் தேதி பள்ளிகள் திறக்க இருப்பதை முன்னிட்டு, இந்த வார இறுதி நாட்களான 09-06-2023 முதல் 11-06-2023 வரையிலான (வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு) மூன்று தினங்களில் கூடுதலான பயணிகள் தமிழ்நாடு முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில், தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டின் முக்கிய இடங்களிலிருந்து வார இறுதி நாட்களில் சென்னைக்கு 650 பேருந்துகளும் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து அதாவது கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம் போன்ற இடங்களிலிருந்து முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூருக்கும் கூடுதலாக 850 சிறப்பு பேருந்துகள் என, ஆக மொத்தம் 1,500 பேருந்துகளை இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே, தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் தங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு, முன்பதிவு செய்து பயணித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு பேருந்துகள் இயக்கத்தினை அனைத்து பேருந்து நிலையங்களிலும், போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, கண்காணித்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், மதுரை மற்றும் திருச்சியிலிருந்து முன்பதிவு செய்யாத பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே, பயணிகள் மேற்குறிப்பிட்டுள்ள பேருந்து சேவையினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை திட்டமிட்டுக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.