ஜூன்.20ல் திருவாரூர் கலைஞர் கோட்டம் திறப்பு – பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் பங்கேற்பு

மே.22

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி ஜூன் 20ஆம் தேதி திருவாரூர் அருகே காட்டூரில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் திறந்து வைக்கிறார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டம் நடைபெற்றது. முதலமைச்சரும் திமுகவின் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்தக்க கூட்டத்தில் துரைமுருகன், டி.ஆர்.பாலு. ஆர்.எஸ்.பாரதி, கனிமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதில் வரும் ஜூன் 3ஆம் தேதி முதல் ஒரு ஆண்டுக்கு கருணாநிதி நூற்றாண்டு விழா கட்சியின் சார்பில் கொண்டாடுவது என முடிவுசெய்யப்பட்டது.

மேலும், வடசென்னையில் வரும் ஜூன் மாதம் 3ஆம் தேதி நடைபெறவுள்ள மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பொதுக்கூட்டத்தை பிரமாண்டமாக நடத்தவும் இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. திமுக 75ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்க உள்ள நிலையில், மாவட்டங்கள்தோறும் கலைஞர் கருணாநிதியின் முழு உருவச்சிலை மற்றும் மார்பளவு சிலைகளை அமைக்க முயற்சி மேற்கொள்வது எனவும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதேபோல், திருவாரூர் அருகே காட்டூரில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை ஜூன் 20ஆம் தேதி பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் திறந்து வைப்பார் என அந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கலைஞர் கோட்டத்தின் திறப்பு விழா தேதி ஜூன் 15 என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஜூன் 20ம் தேதி என மீண்டும் மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கலைஞர் நூற்றாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக “என்றென்றும் கலைஞர்” என்ற தலைப்பில் கருத்தரங்கம், பொதுக்கூட்டம் என ஆண்டு முழுவதும் நடத்தவும் கட்சியின் உயர்நிலை செயல்திட்டக்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *