June 17, 23
பிரதமர் நரேந்திர மோடி 5 நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா மற்றும் எகிப்துக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜூன் 20 முதல் 25-ம் தேதி வரை 5 நாள் பயணமாக அமெரிக்கா மற்றும் எகிப்துக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவிற்கு மோடியின் வருகை நியூயார்க்கில் தொடங்கவுள்ளது. வரும் ஜூன் 21-ம் தேதி ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் சர்வதேச யோகா தினத்தில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார்.
பின்னர், ஜூன் 22-ம் தேதி வாஷிங்டனில் வெள்ளை மாளிகைக்குச் சென்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து உரையாட உள்ளார். அதன் பின்னர், அமெரிக்க காங்கிரஸின் கூட்டு அமர்வில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். தொடர்ந்து ஜூன் 23-ம் தேதி அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் மற்றும் வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பில்ன்கள் ஆகியோருடன் மதிய உணவில் கலந்துகொள்கிறார்.
நிறைவாக ஜூன் 24 மற்றும் 25-ம் தேதி பிரதமர் மோடி எகிப்துக்கு செல்ல உள்ளார். அங்கு அதிபர் அப்தெல் ஃபத்தா எல்-சிசியை சந்திக்க உள்ளார். பின்னர் எகிப்திய அரசை சேர்ந்த மூத்த தலைவர்களுடன் அவர் சந்தித்துப் பேச உள்ளார் என கூறப்பட்டுள்ளது. ஒரு பிரதமராக எகிப்துக்கு மோடி வருவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.