June 13, 23
ஜெயலலிதா குறித்த அண்ணாமலையின் கருத்துக்கு, அதிமுக முன்னாள் அமைச்சர்களும், நிர்வாகிகளும் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளனர். அவர்கள் அதிமுக கூட்டணியை விட்டு வெளியேறுமாறு பாரதீய ஜனதாவை வலியுறுத்தி இருக்கிறார்கள்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து பேசியிருந்தார். அதில் 1991 முதல் 1996ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு துறைகளில் ஊழல் காணப்பட்டதாகவும், முன்னாள் முதலமைச்சர்களை குற்றவாளிகளாக நீதிமன்றம் அறிவித்ததாகவும் கூறியிருந்தார். அதுமட்டுமின்றி அப்போது நடைபெற்ற ஊழலால் தான், ஊழல் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு திகழ்கிறது என்றும், அது தான் ஊழல்களிலேயே முதன்மையானது என்றும் அண்ணாமலை தெரிவித்திருந்தார். ஜெயலலிதா குறித்த அண்ணாமலையின் கருத்து அதிமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஜெயலலிதா குறித்த அண்ணாமலையின் விமர்சனத்துக்கு ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செல்லூர் ராஜூ ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவகலத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாலர்கல் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த முன்னாள் அமைச்சரும், தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்தார். ஊழலைப் பற்றி பேசுவதற்கு அண்ணாமலைக்கு எந்த தகுதியும் இல்லை. ஒரு கவுன்சிலராக கூட இல்லாத அண்ணாமலை மீது அவரது கட்சியினரே பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றனர். எங்கள் முதல்வராக இருந்த ஜெயலலிதா யாரையும் தேடி சென்று சந்திக்கவில்லை. மன்மோகன் சிங்காக இருந்தாலும், மோடியாக இருந்தாலும், ஜெயலலிதா இல்லமான போயஸ் கார்டன் இல்லத்திற்கு தேடி வந்து சந்தித்தார்கள்.
அப்படிப்பட்ட ஆளுமை மிக்க தலைவரைப் பற்றி பேசுவதற்கு முன்னாள் போலீஸ் அதிகாரியான அண்ணாமலைக்கு எந்தவித யோக்கியதையும் இல்லை. அதுவும் ஊழலைப் பற்றி பேச தமிழக பாரதிய ஜனதா கட்சிக்கு எந்தவித அருகதையும் கிடையாது. ஏழை மக்களை ஏமாற்றி பண மோசடி செய்த நபர்களிடம் இருந்து பணம் பெற்றுக்கொண்டு கட்சியில் பொறுப்பு வழங்கிவர் அண்ணாமலை. ஊழலுக்காக பாஜக கட்சியை சார்ந்த நபர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டு உள்ளனர். அதிலும் இந்தியாவிலேயே ஊழல் குற்றச்சாட்டுக்காக ஒரு கட்சியின் தலைவர் தண்டிக்கப்பட்டது என்றால் அது பாஜகவின் தலைவர் தான். இதெல்லாம் அண்ணாமலைக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
40% ஊழல் காரணமாக இவர்கள் தான் கர்நாடகாவில் ஆட்சி இழந்துள்ளனர். நாங்கள் வளர்ந்து விட்டோம் என கூறும் அண்ணாமலை கூட்டணியை விட்டு செல்லலாம். உள்துறை அமித்ஷா அதிமுக தமிழகத்தில் பெரிய கட்சி அவர்கள் தலைமையில் கூட்டணி என இரண்டு முறை கூறினார் அது அண்ணாமலையை வைத்து கொண்டு தலையில் கொட்டும் வகையில் கூறினார். தமிழகத்தின் பாஜக – திமுகவுடன் கூட்டணி வைத்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என ஏற்கனவே கூறினேன். இன்றும் கூறுகிறேன். மோடி பிரதமர் ஆக வேண்டும் என அண்ணாமலைக்கு ஆசை இல்லை.
அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டிற்கு ரெய்டு சோதனைக்கு செல்கின்றனர் என அவர்களுக்கு தகவல் கூறியது யார்? அங்கு சோதனைக்கு சென்ற நபர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை அண்ணாமலை ஏன் கண்டிக்கவில்லை. திமுகவின் ஏஜெண்டாகவும், திமுகவின் பி டீமாகவும் அண்ணாமலை செயல்படுகிறார் என சி.வி.சண்முகம் விமர்சித்தார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியபோது, தமிழக பாஜக கட்டுப்பாடு இல்லாத இயக்கம். மாநில தலைமை பொறுத்தவரை ஒரு பொம்மை மட்டுமே. அந்த பொம்மையை எங்கு வேண்டும் என்றாலும் எடுத்து வைக்கலாம். தமிழக பாஜக தலைவர் என்பவர் நிரந்தர தலைவர் இல்லை. பொம்மை போன்று தான். ராஜாவாகவும் வைக்கலாம். பொம்மையாகவும் வைக்கலாம். ஆண்டவனே தடுத்தாலும் ஜெயலலிதாவை பழித்தவர்களை நாங்கள் விட மாட்டோம் என கடுமையாக விமர்சித்தார்.
இதனையடுத்து, ஜெயலலிதா குறித்து இழிவாக பேசுவது ஆண்டவனாக இருந்தாலும் பொறுத்துக்கொள்ள மாட்டோம் அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார்.