ஆகஸ்டு,06-
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர்’ திரைப்படம் வரும் 10-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
மோகன்லால், சிவராஜ் குமார் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில்குமார், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி படம் வெளியாவதால், இந்தப்படத்துக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகம் மற்றும் பெங்களூருவில் 8 கிளைகளுடன் செயல்படும் தனியார் நிறுவனம், ’ஜெயிலர்’ படத்தை தனது ஊழியர்கள் பார்க்கும் வகையில் 10-ம் தேதி விடுமுறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ரஜினிகாந்தின் ’ஜெயிலர்’ சினிமா 10 ஆம் தேதி வெளியாக உள்ளது. அந்தப் படம் பார்ப்பதற்காக விடுமுறை வேண்டும் என எங்களது HR துறைக்கு விடுமுறை விண்ணப்பங்கள் வருவதைத் தடுக்கும் வகையில் ஆகஸ்ட் 10ஆம் தேதி விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.
இது தவிர, எங்கள் நிறுவன ஊழியர்களுக்கு படத்தின் டிக்கெட்டுகளை இலவசமாக வழங்குகிறோம். இது எங்கள் நிறுவனத்தின் சென்னை, பெங்களூர், திருச்சி, திருநெல்வேலி, செங்கல்பட்டு, மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் மற்றும் அழகப்பன் நகரில் உள்ள அனைத்து கிளைகளுக்கும் பொருந்தும்’’என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
அந்த அறிவிப்பில் முத்தாய்ப்பாக, ‘’நம் தாத்தாவுக்கும், நம் அப்பாவுக்கும், நமக்கும், நம் பிள்ளைகள் மற்றும் பேரன்களுக்கும் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான்-‘ரஜினிகாந்த் வாழ்க’ என்று புகழ்ந்துள்ளது.
சென்னையில் உள்ள மேலும் சில நிறுவனங்களும், தங்கள் ஊழியர்கள் ,முதல் நாளிலேயே ஜெயிலர் படம் பார்க்கும் வகையில், தங்கள் அலுவலகத்துக்கு 10 ஆம் தேதி விடுமுறை விட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
000