ஆகஸ்டு, 27
இரு தினங்களுக்கு முன்னர் டெல்லியில் அறிவிக்கப்பட்ட 2021-ஆம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் கோடம்பாக்கத்தில் முணு முணுப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு படங்கள் அதிக அளவிலான விருதுகளை தட்டிச்சென்றுள்ளது.எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர்.படத்துக்கு 6 விருதுகள் கிடைத்துள்ளது.
மற்றொரு தெலுங்கு படமான புஷ்பா படம் இரண்டு விருதுகளை பெற்றுள்ளது. அந்த படத்தில் நடித்த அல்லு அர்ஜுன் சிறந்த நடிகராக தேர்வாகியுள்ளார். சிறந்த இசை அமைப்பாளர் விருது தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமா 6 விருதுகளை பெற்றாலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களுக்கு விருது கிடைக்கவில்லை.சூர்யா ஹீரோவாக நடிக்க ஞானவேல் இயக்கிய ஜெய்பீம், ஆர்யா நடிக்க பா.ரஞ்சித் டைரக்டு செய்த சர்பட்டா பரம்பரை, மாரி செல்வராஜ் டைரக்ஷனில் தனுஷ் நடித்த கர்ணன் ஆகிய படங்கள் விருதுகளை குவிக்கும் என தமிழ் சினிமா உலகம் எதிர் பார்த்தது.
ஆனால் இந்த படங்கள் எந்த விருதையும் பெறவில்லை.இதனால் தமிழ் ரசிகர்கள் கொதிநிலையில் உள்ளனர். இந்த படங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் தராததால் பல தரப்பினரும் தங்கள் கண்டனங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். நடிகர் பிரகாஷ் ராஜ், ஜெய் பீம் படத்திற்கு தேசிய விருது வழங்கப்படாதது குறித்து காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்த தனது ட்விட்டர் பக்கத்தில், “காந்தியைக் கொன்றவர்கள், இந்திய அரசியலமைப்பை தந்த அம்பேத்கரின் சமத்துவ தத்துவத்தை கொல்ல முயற்சிப்பவர்கள் ‘ஜெய்பீம்’ திரைப்படத்துக்கு எப்படி விருது தருவார்கள்? என பிரகாஷ்ராஜ் பதிவிட்டுள்ளார்.
‘ஜெய்பீம்’ படம் தேசிய விருது அறிவிப்பில் புறக்கணிக்கப்பட்டது குறித்து ஒளிப்பதிவாளர் பிசிஸ்ரீராம், சுசீந்திரன், நானி, அசோக் செல்வன் உள்ளிட்ட பலர் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தனர்.