அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவிக்கு இந்திய ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட 7.5 காரட் வைரக் கல்லை பிரதமர் நரேந்திர மோடி பரிசளித்தார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற விருந்தில் பங்கேற்ற அவர், ஜோ பைடனுக்கு “பத்து முக்கிய உபநிடதங்கள்” என்ற புத்தகத்தின் முதல் பதிப்பை பரிசாக கொடுத்தார்
அமெரிக்கா சென்று உள்ள பிரதமர் நரேந்திர மோடி, நியூயார்க் நகரத்தில் ஐ.நா. சபையில் நடைபெற்ற உலக யோகா தின நிகழ்ச்சியில் நேற்று பங்கேற்றார். பின்னர் அங்கிருந்து தலைநகர் வாஷிங்டன் ( அமெரிக்கா நேரப்படி புதன் கிழமை) வந்த அவருக்கு வழியெங்கும் இந்திய மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இதன் பிறகு அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகை சென்ற அவரை வாசலில் நின்று அதிபர் ஜோ படைனும் அவருடைய மனைவி ஜில் பைடனும் வரவேற்று அழைத்துச் சென்றனர்.
அங்கு இளம் நடனக் கலைஞர்களின் துடிப்பான நடன நிகழ்ச்சி மற்றும் இசையை அனவைரும் ரசித்தனர்.
அப்போது பிரதமர் மோடி அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் படைனுக்கு ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட 7.5 காரட் வைரக் கல்லை பரிசாகக் கொடுத்தார். பூமியில் இருந்து தோண்டி எடுக்கப்ட்ட வைரத்தின் ரசாயண மற்றும் ஒளிபண்புகளை இந்த வைரம் பிரதிபலிக்கும். சுற்றுச் சூழலுக்கு உகந்த ஒன்றாகவும் இருக்கும். சூரிய மற்றும் காற்றுச் சக்தியை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட சிறப்பும் அந்த வைரத்துக்கு உண்டு.
தொடர்ந்து ஜோ பைடன் தம்பதிகள் கொடுத்த விருந்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். இதில் ஜோ பைடனுக்கு மிகவும் விருப்பமான பாஸ்தா, ஐஸ்கிரீம் ஆகியவை இடம் பெற்று இருந்தன.
பிரதமர் மோடி மற்றும் அமெரிக்காவின் முதல் பெண்மணி ஜில் பைடன் ஆகியோர் வர்ஜினியாவில் உள்ள தேசிய அறக்கட்டளைக்கும் சென்று இருந்தனர். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய ஜில் பைடன், “அமெரிக்கா-இந்தியா உறவு என்பது அரசாங்கள் இடையே மட்டுமானது அல்ல. உலகம் முழுவதும் உள்ள நட்புகளைக் கொண்டது, உலகளாவிய சவால்களை நாங்கன் கூட்டாகச் சமாளிக்கும் போது அமெரிக்கா மற்றும் இந்தியா இடையோயான கூட்டாண்மை வலுப்பெறுகிறது” என்றார்.
பிரதமர் மோடி பேசுகையில், இந்திய இளைஞர்களின் ஆற்றலை தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்றவற்றுக்காக அமெரிக்காவின் அறிவியல் உலகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். அமெரிக்காவிடம் உயர்ந்த கல்வி நிறுவனங்களும் மிக நவீன தொழில்நுட்பமும் இருப்பதாகவும், இந்தியாவில் இளைஞர்கள் பணியாற்றத் தயாராக இருப்பதாகவும் மோடி கூறினார். இந்திய இளைஞர்களின் ஆற்றலைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.
000