தூத்துக்குடியில் டவுன்சின்ட்ரோம் குறைபாடுடைய 4 வயது சிறுவன், 50 வகையான விலங்குகள், பறவைகள் உள்ளிட்டவற்றின் படங்களை அடையாளம் காண்பித்து உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
தூத்துக்குடிமுத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்த அருண் நிர்மலா தம்பதியினரின் 4 வயது சிறுவன் செல்வ சந்தோஷ். இவர் அதேபகுதியில் உள்ள சாண்டி மெட்ரிகுலேஷன் பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறார். செல்வசந்தோஷ் பிறந்தபோதே டவுன் சின்ட்ரோம் என்ற மூளை குறைபாடு நோயால் 50 சதவீதம் பாதிக்கப்பட்டிந்தார். இதையடுத்து, அவரின் பெற்றோர், செல்வ சந்தோசை இந்த நோயிலிருந்து பாதுகாத்து, அவரது அறிவுத்திறனை வளர்க்கும் வகையில் பல்வேறு பொருட்களின் படங்களை அடையாளம் காண்பித்து கண்டுபிடிக்க பயிற்சி அளித்தனர்.
இதைத்தொடர்ந்து, நேற்று நடைபெற்ற பள்ளி ஆண்டு விழாவில், சிறுவன் செல்வ சந்தோஷ் ஐம்பது வகையான விலங்குகள் பறவைகள் பல்வேறு விதமான பொருட்கள் ஆகியவற்றின் படங்களை அடையாளம் காண்பித்து சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார். டவுன் சின்ட்ரோம் நோயால் பாதிக்கப்பட்டுள்ள 4 வயது சிறுவனின் சாதனையை பாராட்டி சோழன் புக் ஆப் உலக சாதனை சார்பில் சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. சாதனைச் சிறுவனுக்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் பாராட்டுகள் குவிந்துவருகிறது.