தமிழ்நாட்டில் உள்ள 4,829 டாஸ்மாக் கடைகள் மூலம் மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது.
நாள் ஒன்றுக்கு 130 கோடி ரூபாய்க்கு வியாபாரம் நடக்கிறது. தீபாவளி போன்ற பண்டிகை தினங்களில் 200 கோடி ரூபாயை தாண்டும்.
அனைத்து நாட்களிலும் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படுகிறது. திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், வள்ளலார் தினம் உள்ளிட்ட 8 நாட்கள் மட்டுமே டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை.
அண்டை மாநிலமான கேரளாவில் மதுக்கடைகளுக்கு மாதத்தின் முதல் தேதி லீவு விடப்படுகிறது. சம்பளப்பணத்தை குவாட்டர்களில் அழித்து விடக்கூடாது என்பதால் இந்த ஏற்பாடு.
சுழற்சி முறையில் மதுபான கடை ஊழியர்களுக்கு வார விடுமுறை உண்டு.8 மணி நேரத்துக்கு மேல் வேலை பார்த்தால் கூடுதல் சம்பளமும் அளிக்கப்படுகிறது.
இது போன்ற சலுகைகள் தமிழ்நாட்டில் கிடையாது.
கட்டுப்பாடும் இல்லை.
அநேகமாக எல்லா கடைகளிலும் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்கப்படுகிறது. பல இடங்களில் பார்கள் 24 மணி நேரமும் இயங்குகின்றன.
மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி, டாஸ்மாக் நிர்வாகத்தில் மாற்றங்களை கொண்டு வர முடிவு செய்துள்ளார்.
அதன் ஒரு பகுதியாக டாஸ்மாக் ஊழியர்களுக்கு வார விடுமுறை அளிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
விற்பனை குறைவாக இருக்கும் திங்கள் கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை வார விடுமுறை அளிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
நல்ல யோசனைதான்.
000