தமிழக அரசால் நடத்தப்படும் டாஸ்மாக் கடைகளில் மது குடிப்பவர்கள் ஏதோ ஒரு காரணத்தால் இறந்துவிடுவது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திவிடுகிறது.
திருச்சி மாவட்டத்தில்
லால்குடி அருகே தச்சன்குறிச்சியில் மது குடித்த இருவர் உயிரிழந்ததாக வந்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற திருச்சி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குத்தாலிங்கம் உடலை கைப்பற்றி விசாரணை நடத்த உத்தரவிட்டு உள்ளார்.
தச்சங்குறிச்சி 4 – வது வார்டு உறுப்பினர் முனியாண்டி (55),
கூலித் தொழிலாளி
சிவக்குமார் (48 ) இருவரும் நேற்று மதியம் அங்கு உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடித்து உள்ளனர்.
அதன் பின்னர் இருவருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
பிறகு இருவரும் லால்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களில் சிவக்குமார் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
உடனே முனியாண்டியை மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் வழியில் முனியாண்டியும் உயிரிழந்து விட்டார்.
இவர்கள் இருவரும் நேற்று டாஸ்மாக் கடையில் மது அருந்திய பின்னர் இறந்துவிட்டனர் என்பதால் சம்பவ இடத்திற்கு வந்த திருச்சி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குத்தாலிங்கம் உடல்களைக் கைப்பற்றி ஆய்விற்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு உள்ளார்.
இரண்டு வாரங்கள் முன்பு தஞ்சாவூரில் டாஸ்மாக் கடையை ஒட்டி உள்ள மதுக்கூடத்தில் குடித்த இரண்டு பேர் அங்கேயே சுருண்டு விழுந்து இறந்தனர். உடலை பரிசோதித்ததில் அவர்கள் குடித்த மதுவில் சயனைடு என்ற கொடிய விஷத்தை மர்ம நபர்கள் கலந்து இருப்பது தெரியவந்து. விஷம் கலந்தவர்கள் யார் என்று விசாரணை நடைபெற்று வருகிறது.
அதன் பின்னர் மயிலாடுதுறை அடுத்த மங்கை மடத்தில் டாஸ்மாக் கடையில் மது வாங்கிக் குடித்த இரண்டு பேர் மரணமடைந்தனர். உறவினர் ஒருவரே அவர்களின் மதுவில் சயனைடு கலந்து இருப்பது கண்டறியப்பட்டது. அந்த நபர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
- இப்போது லால்குடி அருகே டாஸ்மாக் கடையில் மது வாங்கிக் குடித்த இரண்டு பேர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு இறந்து விட்டது எதனால் என்று தெரியவில்லை. உடற் கூராய்வுக்குப் பின்னரே இறப்புக்கான காரணம் தெரியவரும்.
000