டுவிட்டருக்கு புதிய தலைமை நிர்வாகி! எலான் மஸ்க் அறிவிப்பு..!!

மே.12

டிவிட்டர் நிறுவனத்திற்கான புதிய தலைமை செயல் அதிகாரியை தேர்வு செய்துவிட்டதாக அந்நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

உலகின் முன்னணி சமூக ஊடகங்களில் ஒன்றான டுவிட்டர் நிறுவனம் குறுஞ்செய்திகளை மக்கள் தங்களுக்குள் பகிர்ந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டு, பின்னர், வீடியோக்கள், புகைப்படங்கள் ஆகியவற்றை அனுப்பி, பரிமாறி கொள்ளும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டது.

இந்த டிவிட்டரின் தலைமை செயல் அதிகாரியாக பதவி வகித்த ஜாக் டோர்சி கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் 29-ந்தேதி பதவி விலகினார். இதனை தொடர்ந்து, டுவிட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை அதிகாரியாக இந்தியரான பராக் அகர்வால் நியமிக்கப்பட்டார். இதன்பின்னர், உலகின் மிகப்பெரிய பணக்காரரும் டெஸ்லா நிறுவனருமான எலான் மஸ்க், கடந்த ஆண்டு அக்டோபர் இறுதியில் டுவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கினார்.

அதைத் தொடர்ந்து, எலான் மஸ்க் டுவிட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் மற்றும் தலைமை நிதி அதிகாரி நெட் செகல், டுவிட்டர் சட்ட மற்றும் கொள்கை நிர்வாகி விஜய காடே உள்ளிட்ட உயர் அதிகாரிகளை அதிரடியாக பணிநீக்கம் செய்தார். அன்று தொடங்கி தற்போதுவரை பயனர் கட்டணம், லோகோ மாற்றம் என அடிக்கடி டிவிட்டர் தொடர்பான பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டபடியே எலான் மஸ்க் இருந்துவருகிறார்.

டிவிட்டருக்கான தலைமை செயல் அதிகாரி பதவி காலியாக இருக்கும் நிலையில், அதற்கான புதிய நபரை தேடும் பணியை எலான் மஸ்க் மேற்கொண்டுவந்தார். இந்நிலையில், புதிய டுவிட்டர் தலைமை நிர்வாக அதிகாரியை தேர்வு செய்துள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “டுவிட்டருக்கு புதிய தலைமை நிர்வாக அதிகாரியை நியமித்துள்ளேன் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் 6 வாரங்களில் பணியை தொடங்குவார். தயாரிப்பு, மென்பொருள் மற்றும் சிஸ்டம் ஆபரேட்களை மேற்பார்வையிடும் நிர்வாகத் தலைவர் & சிடிஓ ஆக எனது பங்களிப்பு மாறும்”. இவ்வாறு எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *