டெஸ்லா கார் ஆலை விரைவில் இந்தியாவில் அமையும்.. மோடியை சந்தித்த எலான் மஸ்க் அறிவிப்பு.. ஆலை அமையும் மாநிலம்?
பிரசித்திப் பெற்ற டெஸ்லா கார்களை தயாரிப்பதற்கான ஆலையை இந்தியாவில் நிறுவுவது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று அந்த ஆலையின் உரிமையாளரும் டுவிட்டர் நிறுவன முன்னாள் தலைமை செயல் அதிகாரியுமான எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
அவர், அமெரிக்கா சென்று உள்ள பிரதமர் நரேந்திர மோடியை நியூயார்க் நகரத்தில் சந்த்துப் பேசினார். சுமார் 30 நிமிட நேரம் இந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது தனது அனுபவங்களைப் பகிர்ந்த எலான் மஸ்க், இந்தியாவின் தனது நிறுவனங்கள் தொழில் தொடங்க விரும்புவது பற்றி மோடியிடம் விருப்பம் தெரிவித்தார்.
எலான் மஸ்க்கின் டெஸ்லா கார்கள் அமெரிக்க சந்தையில் போற்றப்படுகிறவையாக உள்ளன. அந்த நிறுவனத்தின் ஆலை ஒன்றை இந்தியாவில் நிறுவ உள்ளதாக அவர் ஏற்கனவே தெரிவித்து இருந்தார். ஆனால் இந்தியாவில் எந்த இடத்தில் அந்த ஆலை அமையும் என்று எலான் கூறவில்லை. எனவே இந்த சந்திப்பின் போது அது பற்றிய கருத்துப் பரிமாற்றங்களும் நிகழ்ந்து இருக்கலாம் என்று தெரிகிறது.
இந்தியாவில் கார் உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் தமிழ்நாட்டில் அந்த ஆலை அமையவேண்டும் என்பது இங்கு உள்ளவர்களின் விருப்பமாகும்.மற்ற மாநிலங்களும் இதே போன்ற விருப்பத்தைக் கொண்டு உள்ளன.எனவே டெஸ்லா கார் ஆலையை இந்தியாவில் எந்த மாநிலத்தில் எலான் மஸ்க் ஆரம்பிப்பார் என்ற எதிர்ப்பார்ப்பு பலரிடமும் நிலவுகிறது.
பிரதமர் மோடியுனான சந்திப்பு பயன் உள்ளதாக இருந்தது என்று கூறியுள்ள எலான் மஸ்க், நான் அவரின் ரசிகன், அவரை எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கருத்துத் தெரிவித்து உள்ளளர். பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று அடுத்த ஆண்டு இந்தியா வருவதுப் பற்றி பரிசீலித்து வருவதாகவும் அவர் கூறினார். மேலும் ஸ்டார்லிங் இணைய தள நிறுவனத்தை இந்தியாவுக்கு கொண்டு வர திட்டுமிட்டு இருப்பதாகவும் எலான் மஸ் தெரிவித்தார். உலகின் வேறு எந்த நாட்டையும் விட முதலீட்டுக்கு ஏற்ற நாடாக இந்தியா உள்ளதாக கூறிய அவர் டெஸ்லா ஆலையை இந்தியாவில் அமைப்பது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றார்.
பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில்,எரிசக்தி முதல் ஆன்மீகம் வரை பல்வேறு அம்சங்கள் பற்றி உரையாடல் நடந்ததாக குறிப்பிட்டு உள்ளார்.
இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி நியூயார்க் நகரத்தில் ஐநா சபை கட்டிடத்தில் நடை பெறும் உலக யோக தின நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின் அவர் வியாழக்கிழமை வாஷிங்டன் செல்கிறார். அங்கு அவர் அதிபர் ஜோ பைடன் அளிக்கும் விருந்தில் பங்கேற்கிறார். நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்திலும் பேசுகிறார்.
000
000