டைம்ஸ் நவ் செய்தியாளர் கைது… பத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதல்… ஊடக அமைப்புகள் கடும் கண்டனம்!

பஞ்சாபில் டைம்ஸ் நவ் செய்தியாளர் பாவனா கிஷோர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் பக்வந்த் சிங் மன் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் லூதியானாவில் ’ஆம் ஆத்மி கிளினிக்’ திறப்பு விழாவிற்கு சமீபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு சென்ற பெண் ஒருவர் போலீசில் அளித்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, திறப்பு விழா நிகழ்ச்சிக்கு சென்ற போது அதிவேகமாக கார் ஒன்று வந்தது.

அது தன் மீது மோதி கையில் காயத்தை ஏற்படுத்தி விட்டது. இதுபற்றி காரில் இருந்தவர்களிடம் கேள்வி எழுப்பினேன். ஆனால் அவர்கள் தன்னை சாதி ரீதியாக திட்டியதாக புகாரில் தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த காரில் இருந்தவர்களை கைது செய்து போலீசார் அழைத்து சென்றனர். அதில் டைம்ஸ் நவ் செய்தியாளர் பாவனா கிஷோர், மற்றொரு ஊழியர் மிருத்யுஞ்சய் குமார் மற்றும் ஓட்டுநர் பர்மிந்தர் சிங் ஆகிய மூவர் இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் மூன்று பேரும் கீழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அடுத்த இரண்டு வாரங்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காரை ஓட்டாத பாவனா கிஷோர் கைது செய்யப்பட்டது சர்ச்சையாகியுள்ளது. அவர் தன்னை விடுவிக்க பலமுறை வலியுறுத்தியும் போலீசார் விடவில்லை. இது பழிவாங்கும் நோக்கில் கொடுக்கப்பட்ட புகார் என்று டைம்ஸ் நவ் தெரிவித்துள்ளது.

டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் இல்லம் பல கோடி ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இதுபற்றி விரிவாக செய்தி சேகரித்து டைம்ஸ் நவ் செய்தியாளர் பாவனா கிஷோர் வெளியிட்டிருந்தார். இதனால் அவர் மீது ஆம் ஆத்மி கடும் அதிருப்தியில் இருந்து வந்ததாக கூறுகின்றனர். இதன் தொடர்ச்சியாகவே இப்படி ஒரு புகாரில் பாவனா கிஷோரை சிக்க வைக்கப்பட்டிருப்பதாக பத்திரிகையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பத்திரிகை சுதந்திரத்தை முடக்கும் வேலை என்று குற்றம்சாட்டியுள்ளனர். இதற்கிடையில் பாவனா கிஷோருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி பஞ்சாப் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த விவகாரம் பஞ்சாப் மாநில அரசியலில் பரபரப்பை கொளுத்தி போட்டுள்ளது. ஆளும் அரசிற்கு எதிராக பலரும் கண்டனக் குரல்களை எழுப்பி வருகின்றனர். பத்திரிகையாளர் கைது விஷயத்தில் பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்ட பாஜக தலைவர்களும் பத்திரிகையாளருக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். Editors Guild of India வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், பத்திரிகையாளர்கள் மீது தவறான வகையில் சட்டங்களை பயன்படுத்தும் போக்கு மிகவும் கவலை அளிக்கிறது. சமீபத்திய நிகழ்வாக டைம்ஸ் நவ் செய்தியாளர் கைது விவகாரத்தில் பஞ்சாப் போலீஸ் உரிய விதிமுறைகளை பின்பற்றவில்லை. அந்த விபத்திற்கும் செய்தியாளர் பாவனா கிஷோருக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று டைம்ஸ் நவ் கூறுகிறது. அவர் காரை ஓட்டவில்லை. இருப்பினும் போலீசார் கைது செய்து அழைத்து சென்றுள்ளனர். அப்போது பெண் காவலர்கள் தான் பணியில் இருந்திருக்க வேண்டும். ஆனால் அழைத்து சென்றவர் ஆண் காவலர். இது சட்டத்திற்கு புறம்பான செயல். மேலும் லூதியானா காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையானது நடக்காத விஷயங்களையும், அவசர கதியிலும் போடப்பட்டிருப்பது தெரிகிறது. எனவே இந்த விவகாரத்தில் இருந்து செய்தியாளரை பஞ்சாப் அரசு விடுவிக்க வேண்டும்.

போலீசார் உரிய சட்ட வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும். ஒரு செய்தி சேகரிக்க பாவனா கிஷோர் சென்று கொண்டிருந்தார். அவரது பணிக்கு மரியாதை அளித்து போலீசார் முக்கியத்துவம் அளித்து செயல்பட்டிருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் Press Club of India-வும் தனது கண்டனத்தை பதிவு செய்து, போலியாக ஜோடிக்கப்பட்ட வழக்கை திரும்ப பெற வேண்டும். இந்த விவகாரத்தில் முதல்வர் பகவந்த் சிங் மன் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *