எம்பி பதவி தகுதி நீக்கத்திற்கு பின்னர் முதல்முறையாக ராகுல் காந்தி வயநாடு தொகுதிக்கு நாளை பயணம் செய்யவுள்ளார்.
2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் கேரளா மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிட்ட வெற்றி பெற்று எம்பி ஆனார் ராகுல் காந்தி. சுமார் 4 ஆண்டுகள் கடந்து அடுத்த தேர்தல் வரவுள்ள நிலையில், நீதிமன்ற தீர்ப்பு காரணமாக சமீபத்தில் அவரது எம்பி பதவி பறிபோனது. 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் பரப்புரையில் கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி உரையாற்றிய போது எப்படி அனைத்து திருடர்களின் துணைப் பெயரும் (surname) ‘மோடி’ என்றே இருக்கிறது என்று பேசினார்.
ராகுல் காந்தியின் இந்த கருத்துக்கு எதிராக குஜராத் பாஜக எம்எல்ஏ புனரேஷ் மோடி கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என தீர்ப்பளித்த சூரத் நீதிமன்றம் இரண்டு ஆண்டு சிறை தண்டனை வழங்கியது. அதைத் தொடர்ந்து ராகுல் காந்தி எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இது தேசிய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு போராட்டங்களை காங்கிரஸ் கட்சி முன்னெடுத்து நடத்தியது. அத்துடன் குஜராத் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நீதிமன்ற தீர்ப்புக்குப் பின் முதல்முறையாக வயநாடு தொகுதிக்கு ராகுல் காந்தி சுற்றுப் பயணம் மேற்கொள்ளகிறார்.
நாளை ஒரு நாள் சுற்று பயணமாக கேரளாவின் வயநாட்டிற்கு வரும் ராகுல் காந்தி, அங்கு பிரம்மாண்ட சாலை பேரணி மேற்கொண்டு அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேச திட்டமிட்டுள்ளார். பரபரப்பான சூழலுக்கு மத்தியில் ராகுல் வருகை தரும் நிலையில், கேரளா காங்கிரஸ் தலைவர்கள் சிறப்பான வரவேற்பு வழங்க மும்முரமாக ஏற்பாடு செய்து வருகின்றனர்.