ராமநாதபுரம் கடற்கரையில் கடத்தலில் முதலிடத்தில் இருப்பது தங்கக் கட்டிகள்.இவைகளை இலங்கையில் இருந்து கடல் வழியாக படகில் ராமேஷ்வரம் கடற்கரைக்கு கொண்டு வருகிறார்கள். ஒவ்வொரு முறையும் கொண்டு வரப்படும் தங்கத்தின் அளவு ஒரு கிலோவுக்கு மேல்தான்.
உலகத்தின் பிற இடங்களில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்படும் தங்கக் கட்டிகள் அங்கு உள்ளவர்களால் படகில் அனுப்பி வைக்கப்படுகிறது. நடுக்கடலில் அந்த தங்கம் தமிழ்நாட்டு படகுக்கு மாறுகிறது.
கடந்த வாரம் 30 கிலோவுக்கும் அதிகமான தங்கம் சிக்கியது. சிலர் பிடிபட்டனர். இன்னும் சிலர் தேடப்பட்டு வருகின்றனர்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் திங்கள் கிழமை நடுக்கடலில் ரோந்து சென்ற சுங்கத் துறை அதிகாரிகள் படகு ஒன்றில் இருந்து 5 கிலோ எடை உள்ள தங்கத்தை கைப்பற்றி உள்ளனர். அந்தப் படகில் இருந்து தப்பி ஓடிய மூன்று பேர் பை ஒன்றை கடலில் வீசிவிட்டுச் சென்று விட்டனர். அந்தப் பையிலும் தங்கக் கட்டிகள் இருக்கலாம் என்று சுங்கத் துறை அதிகாரிகள் தேட முடிவு செய்து இருக்கிறார்கள்.
தங்கம், இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு கடத்தப் படுகிறது என்றால் இ்ங்கிருந்து போதைப் பொருட்கள், கடல் அட்டை, மஞ்சள், பீடி அட்டை போன்றவை அங்கு கொண்டு செல்லப்படுகிறது.
இதனால் ராமேஷ்வரம்,பாம்பன்,மண்பம், தங்கச்சி மடம் போன்ற ராமநாதபுரம் மாவட்டத்தின் கடலோர ஊர்களில் சோதனைகளும் கண்காணிப்பும் அதிமாகவே உள்ளது.