பக்ரித் பண்டிகை நெருங்குவதால் ஆடுகளின் விற்பனை தமிழ்நாட்டு சந்தைகளில் முழுவீச்சில் நடைபெறுகிறது.
திருப்பூர் மாட்டம் குண்டடத்தில் இன்றைய வாரச்சந்தையில் 3 கோடி ரூபாய் மதிப்புக்கு ஆடுகள் விற்பனையாகி உள்ளன.
கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, ஈரோடு மற்றும் கேரள மாநிலத்தில் இருந்தும் வியாபாரிகள் காலையிலயே குவிந்திருந்தனர். அதற்கேற்ப கிராமப் புறங்களில் இருந்து ஏராளமான ஆடுகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
வழக்கமான நாட்களில் 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படும் ஆடுகள் 15 ஆயிரம் ரூபாய்க்கும் 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யக்கூடிய ஆடுகள் 25 ஆயிரத்திற்கும் விற்பனையானது.
சுமார் 80 ஆயிரம் ஆடுகள் 3 கோடி ரூபாய் அளவுக்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளதாக வியாபாரிகள் கூறியுள்ளனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்து உள்ள வீரகனூரில் மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடுகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. 60 கிலோ எடை கொண்ட ஒரு ஆடு 40 ஆயிரம் ரூபாய்க்கு விலை போயுள்ளது. இதன் படி ஆட்டின் ஒரு கிலோ எடைக்கு 650 ரூபாய் கிடைத்து உள்ளது.
வீரகனூருக்கு அதிமான ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருந்தாலும் விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆட்டுக்கும் அதன் எடைக்கு ஏற்ப 500 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை கூடுதலாக கிடைத்துள்ளது.
கடலூர் மாவட்டம் வேப்பூர் சந்தை ஆடு விற்பனைக்குப் பேர் போனது. அங்கு பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5 கோடி ரூபாய் மதப்புள்ள ஆடுகள் விற்பனை ஆனது.
மதுரை அடுத்த திருமங்கலம் ஆட்டு சந்தையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் சுமார் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடுகளை வாங்கிச் சென்றனர்
தமிழ்நாட்டில் ஒரு கிலோ ஆட்டுக்கறியின் விலை கடந்த இரண்டு ஆண்டுகளாகவே குறைந்த பட்சம் 800 ரூபாயாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பக்ரித் பண்டிகையின் போது விலையை கூட்டி விற்கும் வியாபாரிகள் ஏற்றப்பட்ட அந்த விலையை பண்டிகை முடிந்த பிறகு குறைப்பதில்லை. இந்த ஆண்டு ஒரு கிலோ ஆட்டுக்கறி ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட உள்ளது.
ஆனாலும் சென்னை போன்ற நகரங்களில் நாட்டு ஆட்டுக்கறி கிடைப்பது அரிதுதான். ஊட்டச் சத்துக் கொடுத்து பண்ணைகளில் செயற்கையாக வளர்க்கப்படும் ஆடுகளின் கறிதான் விற்கப்படுகிறது.
10 கிலோ எடைக்குள் இருக்கும் நாட்டு ஆட்டுக்கிடாயின் கறிதான் மென்மையாகவும் சுவையாகவும் மணமாகவும் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததுதான். இவை எந்த ஊட்டச்சத்தும் கொடுக்கப்படாமல் வயல் வெளிகளில் இலை, புல் போன்றவற்றை மேய்ந்து வளர்கிறவை.
ஆனால் நாற்பது, ஐம்பது கிலோ எடையுடன் மாடு போன்ற தோற்றம் கொண்ட ஆட்டுக்கிடாய்கள் முதலில் நாட்டு வகையைச் சேர்ந்தவை அல்ல. இயற்கையான முறையில் வளர்க்கப் பட்டவையும் கிடையாது. பிறகு அதில் சுவையும் மணமும் எப்படி இருக்கும். எது எப்படியோ ஆட்டுக்கிடாய்கள், வாங்கி விற்கும் வியாபாரிகளுக்கு தங்க முட்டைப் போடும் வாத்துகளாக உள்ளன என்பதுதான் உண்மை.
000