மே.12
கோவை சின்னவேடம்பட்டியை சேர்ந்த 11 வயது சிறுவன் ராஜ முனீஸ்வர், 2 மணி நேரம் தொடர்ச்சியாக நீச்சல் குளத்தில் ஒற்றை மற்றும் இரட்டை சிலம்பங்களை சுழற்றி சாதனை புரிந்துள்ளார். நோபல் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
கோவை சின்னவேடம்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் சந்தான ராஜா- ராஜேஸ்வரி தம்பதி. இவர்களது 11 வயது மகன் ராஜமுனீஸ்வர். தனியார் பள்ளி ஒன்றில் 6ஆம் வகுப்பு படித்துவருகிறார். கடந்த சில வருடங்களாக வி.ஆர்.சிலம்பம் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் சிலம்பம் உள்ளிட்ட தற்காப்பு கலைகளை சிறுவன் ராஜமுனீஸ்வர் பயின்று வந்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு நீச்சலிலும் ஆர்வம் உள்ளதை அறிந்து கொண்ட பயிற்சியாளர் திலீப்குமார், Splash Swimming Academy யுடன் இணைந்து அவருக்கு நீச்சல் பயிற்சியும் அளித்து, புதுவித சாதனையை படைப்பதற்காக நீரில் சிலம்பம் சுழற்றுவதற்கு பயிற்சி அளித்துவந்தார்.
பயிற்சிகளை முறையாக கற்றுக் கொண்ட மாணவர் ராஜமுனீஸ்வர், இரண்டு மணி நேரம் தொடர்ச்சியாக நீச்சல் குளத்தில் ஒற்றை மற்றும் இரட்டை சிலம்பங்களை சுழற்றி தற்போது சாதனைபடைத்துள்ளார். அதிலும் பல்வேறு விதமான நீச்சல் யுத்திகளை கையாண்டு சாதனையை புரிந்துள்ளார். இவரது சாதனையை நோபல் உலக சாதனை புத்தகம் அங்கீகரித்துள்ளது. சிலம்பத்தில் புதிய வகையில் சாதனை புரிந்த மாணவர் ராஜமுனீஸ்வருக்கு சிலம்ப பயிற்சியாளர் திலீப்குமார், நீச்சல் பயிற்சியாளர்கள் சிவராஜகோபாலன், அருள்பாண்டி மற்றும் அவரது பெற்றோர்கள், நண்பர்கள், உறவினர்கள் என பலரும் பாராட்டு தெரிவித்தனர்.