மதுரையில் ஆகஸ்டு 20 ஆம் தேதி நடை பெற உள்ள அதிமுக மாநாட்டுக்கான லோகோவை கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டு உள்ளனார்.
சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்குப் பிறகு லோகோ வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனுவாசன், தமிழ் மகன் உசேன், நத்தம் விசுவநாதன், கே.பி.முனுசாமி ஆகியோருடன் இணைந்து எடப்பாடி பழனிசாமி “வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி” என்ற தலைப்புடன் மாநாட்டுக்கான லோகோவை வெளியிட்டார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது..
சரித்திர சாதனைகளை செய்த இயக்கம் அதிமுக. இன்று ஆல மரம் போல தழைத்தோங்கி நிற்கிறது. மாமன்னன் படம் என்னவோ பெரிய சீர்த்திருத்ததை செய்து விட்டது போல விளம்பரம் செய்கிறார்கள். அந்த படத்தின் கதை அண்ணன் தனபாலின் கதை என்று சொலிகிறார்கள். தனபால், சபாநாயகராக இருந்த போது அவரை இருக்கையில் இருந்து கீழே இழுத்துத் தள்ளிய கட்சிதான் திமுக. அவர் மீது நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வந்த கட்சிதான் திமுக. எனவே சாதி வேற்றுமைகளைப் பற்றி பேசுவதற்கு திமுகவுக்கு எந்த தகுதியும் இல்லை. தமிழ் நாட்டில் சாதி மதப் பேதங்கள் இல்லாத இயக்கம் அதிமுக தான்.
உரிய சிகிச்சை அளித்திருந்தால் ஒன்றரை வயது குழந்தையின் கையை அகற்றி இருக்க வேண்டியதில்லை. கடலூரில் சளிக்கு சிகிச்சை பெற வந்த சிறுமிக்கு நாய்க்கடிக்கான ஊசியை போட்டு இருக்கிறார்கள். அரசு மருத்துவமனைகளில் நோய்க்கு உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
மேட்டூ்ர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் இன்னும் கடை மடைக்கு சென்று சேரவில்லை என்று சொல்கிறார்கள். ஆரம்பத்தில் தண்ணீர் சென்ற இடங்களுக்கும் இப்போது தண்ணீர் செல்லவில்லை என்று தகவல் வருகிறது. குறுவை சாகுபடி முறையாக நடைபெற முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்
அதிமுக- பாஜக கூட்டணி குறித்து ஏற்கனவே அறிவித்துவிட்டோம். தேர்தல் வரும் போது வேறு எந்தெந்த கட்சிகளுடம் கூட்டணி என்பதை தெரிவிப்போம்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
000