May 30, 2023
சென்னை கிண்டியில் பன்னோக்கு மருத்துவமனையை திறந்து வைக்க வரும் 15ஆம் தேதி குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தமிழ்நாடு வருகை தர உள்ளார்.
சென்னை கிண்டியில் 230 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், இந்த மருத்துவமனையை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாளில் திறக்க தமிழக அரசு திட்டமிட்டது.
மருத்துவமனையை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வரும் ஜூன் 5ஆம் தேதி திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், வெளிநாடு பயணம் காரணமாக ஜூன் 5ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் தமிழ்நாடு வருகை திடீரென ரத்தானது.
இந்நிலையில், குடியரசுத் தலைவர் ஜூன் 15 ஆம் தேதி தமிழ்நாடு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் கிண்டி பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை அவர் திறந்து வைக்க உள்ளார்.
இதற்காக குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏப்ரல் 28ம் தேதி டெல்லியில் சந்தித்து அழைப்பு விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.