மே.18
தமிழகத்தில் அக்னிநட்சத்திரம் உச்சமடைந்துள்ள நிலையில், வேலூர், திருத்தணி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் நேற்று வெயில் 100 டிகிரியைத் தாண்டியது.
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் வரும் 28ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையொட்டி, கடந்த சில நாட்களாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே இருந்துவருகிறது. ஒரு சில இடங்களில் இலேசான மழை முதல் மிதமான மழை வரை பெய்துவருகிறது. இருப்பினும், கடந்த 3 நாட்களாக காலை முதலே வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்துவருகிறது.
அந்த வகையில், நேற்று தமிழகத்தின் 15 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியைத் தாண்டியது. இதனால், அக்னியின் வெம்மை தாங்காமல் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
அதிகபட்சமாக வேலூர் மற்றும் திருத்தணியில் 107 டிகிரியும், திருவள்ளூர் மாவட்டம் திரூரில் 106 டிகிரியும், கடப்பாக்கத்தில் 105 டிகிரியும் வெப்பம் பதிவானது. சென்னையில் அதிகபட்சமாக மாதவரத்தில் 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும், மீனம்பாக்கம் மற்றும் எண்ணூரில் 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலையும் பதிவானது. கரூர் – பரமத்தி மற்றும் புதுச்சேரியில் 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெயிலும், மதுரை, கடலூர் மாவட்டங்களில் 105 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு அதிகமாகவும்,திருச்சியில் 103 டிகிரியும் வெப்பம் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதேபோல, பாளையங்கோட்டை, தஞ்சை, விருத்தாசலம், திருப்பத்தூர் ஆகிய இடங்களில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும், ஈரோடு, தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி, புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் ஆகிய பகுதிகளில் 101 டிகிரி வெப்பமும் பதிவானது குறிப்பிடத்தக்கது.