ஜூன்.1
தமிழகப் பகுதிகளின்மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனத்தால் தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்றும்(ஜூன்.1), நாளை(ஜூன்.2)யும் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 3, 4-ம் தேதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தென் தமிழக கடலோரப் பகுதிகளில் இன்றும், மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய குமரிக்கடல் பகுதிகளிலும், ஜூன் 2-ம் தேதி மேற்கூறிய பகுதிகள் மற்றும் இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளிலும் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்று குறிப்பிட்டுள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.