மே.2
தமிழகத்தில் சென்னை உட்பட பல மாவட்டங்களில் நேற்றிரவு பரவலாக மழை பெய்துள்ளது. இந்நிலையில், இன்றும் நீலகிரி, கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பல இடங்களில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. ஓரு சில இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது. அதன்படி, தமிழகத்தில் சென்னை, ஈரோடு, காஞ்சிபுரம், தஞ்சை உட்பட பல மாவட்டங்களில் இரவு முதல் அதிகாலை வரை பல இடங்களில் இலேசானது முதல் மிதமானது வரை மழை பெய்துள்ளது. இதனால், கோடை வெப்பத்தின் தாக்கம் குறைந்து காலை முதல் குளிர்ச்சியான சூழல் நிலவிவருகிறது.
இந்நிலையில், தென் இந்திய பகுதிகளின் மேல்வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவி வருகிறது. இதனால், சென்னையின் ஒருசில இடங்களில் இன்றும் இடி மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதேபோல், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, நாளையும் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களுக்கும் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை நாளைக்கும் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே இந்த ஆண்டு அக்னிவெயில் எனப்படும் கத்திரி வெயில் நாளை மறுநாள் (மே.4) தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மே.28ம் தேதி வரை 24 நாட்கள் நீடிக்கும் இந்த கத்திரி வெயில் காலத்தில் சூரியனின் வெப்பம் அதிகமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.