தமிழகத்தின் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் நண்பகல் 11 மணி முதல் மாலை 3 மணி வரை மக்கள் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டுமென மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார்.
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஏப்.11 முதல் மூன்று நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனால், தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் கடுமையான வெயில் வாட்டி எடுத்தது. குழந்தைகள், பெரியவர்கள், வாகன ஓட்டிகள் என அனைத்துத்தரப்பினரும் கோடை வெயிலால் அவதிக்குள்ளாகிவருகின்றனர்.
இந்த நிலையில், தமிழகத்தின் 8 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியைத் தாண்டியுள்ளது. அதன்படி, ஈரோடு, கரூர், மதுரை, நாமக்கல், சேலம், திருப்பத்தூர், வேலூர் ஆகிய இடங்களில் 100 டிகிரியை தாண்டி சுட்டெரித்த வெயிலால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. வானிலை ஆய்வு மையத்தில் பதிவான விவரங்களின்படி,
ஈரோடில் 101.48 டிகிரியும், கரூர் மாவட்டம் பரமத்தியில் 102.2 டிகிரியும், மதுரை மற்றும் மதுரை விமானநிலையத்தில் 100.04 டிகிரியும், நாமக்கல் மற்றும் திருப்பத்தூரில் 100.04 டிகிரியும், சேலத்தில் 101.84 மற்றும் வேலூரில் 100.76 டிகிரியும் வெப்பம் பதிவானது.
இதனிடையே, கோடை வெப்பம் குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். மேலும், வெயில் காலங்களில், தேநீர், காபி, செயற்கை குளிர்பானங்கள், மதுபானங்கள் உள்ளிட்டவைகளை உட்கொள்ளாமல் தவிர்க்க வேண்டும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தினார்.