தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி ஜூன் -7 க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர்அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகத்தில் 6 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு ஜூன் ஒன்றாம் தேதியும், 1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கு ஜூன் ஐந்தாம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தின் வெப்பத்தின் தாக்கம் தொடர்ந்து நீடிப்பதால், பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டுமென பாமக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
இந்த விவகாரம் தொடர்பாக சென்னையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் ஆலோசனை நடத்தினார். அப்போது மாவட்டங்களில் நிலவும் வெயிலின் தாக்கம் குறித்து அதிகாரிகள் எடுத்துரைத்ததாக தெரிகிறது.
மேலும் ஒட்டுமொத்தமாக ஒன்று முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் ஜூன் 7ஆம் தேதி பள்ளிகளை திறக்கலாம் எனவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி ஜூன் -7 க்கு மாற்றம் என்று அமைச்சர்அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.