ஏப்ரல்.18
தமிழகத்தில் போக்குவரத்துத்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மே மாதம் 3ஆம் தேதிக்கு பின்பு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சிஐடியு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சிஐடியு சங்க மாநில சம்மேளன குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அச்சங்கத்தின் மாநில தலைவர் சௌந்தரராஜன் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சௌந்திரராஜன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கம் பல்வேறு சிறப்புகளை உடையதாக செயல்பட்டு வந்த நிலையில், தற்போது ஏராளமான பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. குறிப்பாக தொழிலாளர்கள் விவகாரத்தில் சட்டப்பேரவையில் அமைச்சர் அறிவிப்பு ஒரு விதமாகவும், நடந்துகொள்வது வேறுவிதமாகவும் இருக்கிறது. இவை எங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
மேலும், தனியார்மயம் கொண்டு வரப்படமாட்டாது என அமைச்சர் தெரிவித்துவரும் நிலையில், தற்போது அவுட்சோர்சிங் முறையில் பணியாளர்களை நியமிக்க இருக்கும் முடிவு கடும் கண்டனத்துக்குரியது. காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், தற்போது பட்ஜெட்டில் அறிவித்துள்ள பண பலன்களை விடுவித்து ஊழியர்களுக்கான நிலுவை தொகையினை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மே 3ம்தேதிக்கு பின்பு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதற்காக நோட்டீஸ் இன்று (ஏப்.18) முதல் வழங்கப்பட உள்ளது.
15 நாட்களுக்குள் தொழிலாளர்துறையும் தமிழக அரசும் தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமரச தீர்வு காண வேண்டும். போக்குவரத்து கழக தொழிலாளர்கள் விவகாரத்தில் மத்திய அரசின் போக்கையே திமுக அரசு பின்பற்றுவதாக சந்தேகம் ஏற்படுகிறது. எங்கள் கோரிக்கைகள் நியாயமானது என்பதால் மற்ற தொழிற்சங்கத்தினரும் இதற்கு முழு ஆதரவு அளிப்பார்கள்.
இவ்வாறு சௌந்திரராஜன் தெரிவித்தார்.