ஏப்ரல்.22
தமிழகத்தில் கொரோனா பரவல் விகிதம் அதிகரித்திருப்பதாகவும், தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும்படியும் தலைமைச் செயலாளருக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் கடந்த சில நாட்களாக அதிகரித்துவருகிறது. டெல்லி, தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், ஹரியானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட 8 மாநிலங்களில் தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதாக மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பாகத் தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலத் தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய அரசு தனித்தனியாக கடிதம் அனுப்பியுள்ளது. அதன்படி, தமிழக தலைமைச் செயலாளருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், நடப்பு வாரத்தில், தமிழ்நாட்டின் 11 மாவட்டங்களில் கொரோனா தொற்று உறுதி விகிதம் 10 சதவீதத்திற்கும் மேல் பதிவாகியுள்ளதை மத்திய அரசு சுட்டிக்காட்டியுள்ளது.
குறிப்பாக, தஞ்சாவூரில் கொரோனா பரவல் விகிதம் அதிகமாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள மத்திய அரசு, அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த மாநில அரசை வலியுறுத்தியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 28 பேர் உயிரிழந்து இருப்பதாகவும், மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் 8 மாநிலங்களுக்கு மத்திய அரசு சார்பில் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.