மே.27
தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல கீழடுக்கு மற்றும் மேலடுக்கு சுழற்சியால் பல மாவட்டங்களில் அவ்வப்போது கோடை மழையும் பெய்து வருகிறது. இதன்மூலம் கோடைகாலத்தில் பெய்யவேண்டிய இயல்பான மழை அளவைவிட 65 சதவீதம் அதிகமாக மழை பதிவாகியிருக்கிறது.
இந்த நிலையில், தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரு சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை (மே.28) மற்றும் நாளை மறுதினம் (மே.29) ஆகிய இரு நாட்களும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது.
இந்த நிலையில், கடந்த ஒரு மாத காலமாக மக்களை வாட்டியெடுத்துவந்த அக்னி நட்சத்திர வெயில் நாளையுடன் (மே.28) நிறைவடைகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்றும், நாளையும் வெயில் சற்று உக்கிரமாகவே இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.