மே.11
தமிழக மின்சார வாரிய ஊழியர்களுக்கு 6 சதவீத ஊதிய உயர்வு வழங்க மின்வாரிய தொழிற்சங்கத்தினருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைமை அலுவலகத்தில் மின்வாரியத்தில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதிய விகித உயர்வு குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. அதில் மின்வாரிய தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி மற்றும் மின் வாரிய செயலாளர் ஆ.மணிக்கண்ணன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, மின்வாரிய பணியாளர்களுக்கு 1.12.2019 நாளன்று பெறுகின்ற ஊதியத்தில் 6 சதவீதம் ஊதிய உயர்வு அளிக்க, நிர்வாகத்தின் சார்பிலும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் சார்பிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல, 1.12.2019ம் நாளன்று, பத்து வருடங்கள் பணிமுடித்த ஊழியர்கள் மற்றும் அலுவலர்களுக்கும் பணிப்பலனாக 1.12.2019 நாளன்று பெறும் ஊதியத்தில் 3 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்றார்.
இந்த ஊதிய உயர்வு நடவடிக்கையால், மாநில அரசுக்கு சுமார் 527 கோடி ரூபாய் வரை கூடுதல் செலவாகும் என்று எதிர் பார்க்கப்படுவதாகவும் அவர் அப்போது கூறினார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், ” அனைத்து தொழிற்சங்கத்தினரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் உன்னதமான ஊதிய உயர்வினை வழங்கிய, தமிழ்நாடு முதலமைச்சருக்கு மின் வாரிய தொழிலாளர்கள் சார்பாக கோடான கோடி நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்” என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி குறிப்பிட்டுள்ளார்.