தமிழக முதலமைச்சர் நாளை சிங்கப்பூர் பயணம் – தொழில் முதலீடுகளை ஈர்க்கத் திட்டம்

மே.22

தமிழகத்திற்கான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் சுற்றுப் பயணமாக நாளை சிங்கப்பூர் செல்கிறார்.

தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அப்போது, மாநிலத்தின் முதல் அமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலின், தொழில்துறையை முன்னெடுத்து செல்வதில் அதிக கவனம் செலுத்திவருகிறார்.

அதன்படி, 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு தமிழகத்தின் பொருளாதாரத்தை உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளதாக மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். இந்த நிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான குழு துபாய், அபுதாபி உள்ளிட்ட நாடுகளுக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக பயணம் மேற்கொண்டது.

அதில், 6 தொழில் நிறுவனங்களுடன் ரூ.6 ஆயிரத்து 100 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. அதன் மூலம் தமிழகத்தில் 14,700 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறப்பட்டது. மேலும், கடந்த ஜனவரி மாதம் வரை தமிழகத்தில் தொழில் தொடங்க 207 நிறுவனங்கள் முன்வந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.

அதில், 111 தொழில் நிறுவனங்கள் உடனடியாகத் தொடங்கப்பட்டு, ரூ.13 ஆயிரத்து 726 கோடி அளவிலான முதலீடுகள் தமிழகத்திற்கு ஈர்க்கப்பட்டுள்ளன. 15 ஆயிரத்து 529 பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைத்துள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த ஆண்டு (2024) ஜனவரி மாதம் 10, 11 ஆகிய தேதிகளிவல் உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறவுள்ளது . 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து முதலீட்டாளர்கள் அதில் கலந்து கொள்வார்கள் என்று ஏற்கனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.

இதனிடையே, இரண்டு நாள் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (மே.23) தொழில் துறை அதிகாரிகளுடன் சிங்கப்பூர் செல்கிறார். அங்கு 24-ந்தேதி நடைபெறும் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் அவர் பங்கேற்கிறார். அந்த மாநாட்டில், சிங்கப்பூர் இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபை உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.

முன்னதாக, தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் சிங்கப்பூர் சென்றார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி, அதற்கான முன்னேற்பாடுகளை அவர் செய்ய இருக்கிறார். சிங்கப்பூர் பயணத்தை முடித்துக்கொண்டு, அங்கிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு செல்லவுள்ளார். அங்கும் தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து, தமிழ்நாட்டுக்கு தொழில் தொடங்க வருமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *