ஏப்.15
மத்திய ரிசர்வ் காவல்படை (சி.ஆர்.பி.எப்)-ல் காலியாகவுள்ள பதவியிடங்களை நிரப்ப நடத்தப்படும் கணினி வழி எழுத்தேர்வை தமிழ் மொழியிலும் நடத்த வலியுறுத்தி, சென்னையில் வரும் திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி அறிவித்துள்ளது.
மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய ரிசர்வ் காவல் படையில் 9,223 பதவியிடங்களுக்கான ஆட்சேர்க்கை அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது. இப்பதவிகளுக்கு கணினி வழியில் எழுத்துத் தேர்வு நடத்தப்படும் என்றும், ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இரண்டு மொழிகளிலும் மட்டும் கேள்விகள் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் இந்த அறிவிப்பு தமிழ்நாட்டில் இருந்து விண்ணப்பிப்போரின் நலனுக்கு முற்றிலும் எதிரானதாக இருப்பதாகவும், இது தன்னிச்சையானது மட்டுமல்லாமல் பாகுபாடு காட்டக்கூடியதும் என்றும் கூறியிருந்தார். மேலும், இந்தி பேசாத மாநிலங்களின் இளைஞர்களும் சி.ஆர்.பி.எப்-ல் பணியாற்ற சமவாய்ப்பு பெறும் வகையில், தமிழ் உள்ளிட்ட பிற மாநில மொழிகளிலும் கணினித் தேர்வை நடத்த வேண்டும் என்றும், அதற்கு ஏதுவாக அறிவிக்கையில் மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.
இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த மத்திய உள்துறை அமைச்சகம், சி.ஆர்.பி.எப் தேர்வை இந்தி, ஆங்கிலம் தவிர வேறு மொழிகளில் தேர்வு நடத்தும் திட்டம் இல்லை என தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் முன்வைத்த கோரிக்கையை உள்துறை அமைச்சகம் நிராகரித்துள்ளது. .
இந்நிலையில், சி.ஆர்.பி.எப் தேர்வை தமிழ் மொழியிலும் நடத்த வலியுறுத்தி சென்னையில் நாளை மறுநாள் (ஏப்.17) மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, விளையாட்டுத்துறை அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி மற்றும் மாணவரணி செயலாளர் எழிலரசன் ஆகியோர் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், மத்திய பா.ஜ.க. அரசு தொடர்ந்து “ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே தேர்வு, ஒரே மதம்” என்று பாசிச, சர்வாதிகார தன்மையோடு செயல்படுவதாகவும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.