2025 – ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு பொற்காலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஏமாற்றம் தான் மிஞ்சியது. கடந்த 3 மாதங்களில் தமிழ் சினிமாவில் 72 படங்கள் வெளி வந்துள்ளன. இதில் 4 படங்கள் மட்டுமே வெற்றிப்படங்களாக அமைந்துள்ளன.
ரசிகர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் என அனைத்து தரப்பும் பெரிதும் எதிர்பார்த்த அஜித்தின் ‘விடா முயற்சி’ , போட்ட முதலீட்டில் பாதியைக்கூட வசூலிக்கவில்லை..
எனினும், சாதாரண பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட 4 படங்கள் , தமிழ் திரை உலகை ஓரளவு உயிர்ப்புடன் வைத்துள்ளன, அந்த படங்களை பார்க்கலாம்.
மதகஜராஜா..
விஷால்- சந்தானம் கூட்டணியில், கடந்த 2012 ஆம் ஆண்டு ஆரம்பித்த மதகஜராஜா, 12 ஆண்டுகள் தாமதமாக வெளியானது. சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் மறைந்த நடிகர் கள் மனோபாலா, மணிவண்ணன், ஆகிய இருவரும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்கள். ரூ50 கோடிக்கு மேல் வசூலித்தது.
குடும்பஸ்தன்..
குட்நைட், லவ்வர் என தொடர்ந்து 2 வெற்றிப்படங்களை கொடுத்த நடிகர் மணிகண்டன் நடிப்பில் வெளியான படம் குடும்பஸ்தன். ராஜேஸ்வர் காளிசாமி இயக்கி இருந்தார். இந்த சின்ன பட்ஜெட் படம், 50 நாட்களை கடந்ததுடன், தயாரிப்பாளருக்கும் நல்ல லாபம் அளித்தது.மேலும் மணிகண்டனுக்கும் ‘ஹாட்ரிக்’ வெற்றியை கொடுத்தது.
டிராகன்.
‘ஓ மை கடவுளே’ படத்தின் மூலம் கோடம்பாக்கத்தின் கவனம் ஈர்த்த இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான படம் டிராகன் .’லவ்டுடே ‘ பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்த இந்த படத்தின் பட்ஜெட், ரூ.35 கோடி.வெளியான சில நாட்களிலேயே ரூ.100 கோடி வசூலை எட்டியது.
வீர தீர சூரன்
விக்ரம் நடிப்பில் கடந்த 27 ஆம் தேதி வெளியான வீர தீர சூரன் திரைப்படத்துக்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்தன. வசூலும் குவித்து வருகிறது.
கடந்த 10 நாட்களில் இந்தப்படம் 50 கோடி ரூபாயை தாண்டி வசூல் செய்துள்ளது.
நீண்ட காலத்துக்கு பிறகு விக்ரமுக்கு, இந்தப்படம் வெற்றி படமாக அமைந்துள்ளது.
எஞ்சிய 68 படங்களை தயாரித்தவர்கள் நிம்மதியாக இல்லை. மீதி உள்ள 8 மாதங்களில் தமிழ் சினிமா மீளுமா?
–