தமிழ் மொழி மீது இந்தியை ஒரு போதும் திணிக்க முடியாது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்து உள்ளார். பனாரஸ் இந்து பல்கலைக்கழக மாணவர்களுடன் “தமிழ் தர்ஷன்” என்ற நிகழ்ச்சியில் அவர் உரையாடினார். அப்போது ஆர்.என்.ரவி, இந்தி மொழியை விட தமிழ் மொழி மிகவும் பழமை வாய்ந்தது என்றார். சமஸ்கிருதம் மட்டுமே தமிழுக்கு நிகரான பழமை வாய்ந்த மொழி என்று கூறிய ஆளுநர், தமிழ் மீது ஹிந்தி உட்பட எந்த மொழியையும் திணிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் இளங்கலை பயிலும் மாணவர்கள் உயர்கல்வியை தமிழில் பயில வேண்டும் என்பது தம்முடைய வேண்டுகோள் என்றும் அவர் சொன்னார்.திருக்குறள் மனித சமூகத்திற்கு தேவையான அனைத்து கருத்துகளையும் வழங்கக் கூடிய நூல் என்று குறிப்பிட்ட ஆர்.என்.ரவி, திருக்குறளை ஆழமாக அனைவரும் பயில வேண்டும் என்று வலியுறுத்தினார். திருக்குறள் போல் தமிழில் பல இலக்கியங்கள் உள்ளதைக் குறிப்பிட்ட அவர், பிறமொழி பேசுபவர்கள் தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கியத்தை கற்றுக் கொள்ள நினைப்பது தமக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது என்றார்.
2023-04-13