ஏப்ரல் 21
பிறை தெரிந்ததை அடுத்து தமிழ்நாட்டில் ரம்ஜான் பண்டிகை நாளை கொண்டாட்டப்படும் என்று தமிழ்நாடு அரசின் தலைமை காஜி முகமது சலாவுதீன் ஆயூப் அறிவித்துள்ளார்.
இஸ்லாமியர்களின் புனித மாதமான ரம்ஜான் மாதம் மார்ச் 24 ம் தேதி தொடங்கியது. இஸ்லாமியர்களின் முக்கியமான ஐந்து கடமைகளில் ஒன்றாக ரம்ஜான் நோன்பு கருதப்படுகிறது. பிறை தெரிந்தது முதல் தினமும் சூரிய உதயத்திற்கு முன் நோன்பினை துவக்கி, பகல் முழுவதும் தண்ணீர், உணவு அருந்தாமல் கடுமையான நோன்பு விதிகள் கடைபிடிக்கப்படுகிறது. மாலையில் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகே இஃப்தார் விருந்துடன் நோன்பு திறக்கும் நிகழ்வு மேற்கொள்ளப்படுகிறது.
மொத்தம் 30 நாட்கள் கொண்டதாக ரம்ஜான் மாதத்தில், பிறை தெரிவதைப் பொறுத்தே ரம்ஜான் பண்டிகைக் கொண்டாடப்படும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டும் பிறை தெரிவதை தமிழ்நாடு அரசின் தலைமை காஜி அறிவிப்பார்.
அதன்படி ரமலான் மாதத்தின் ஷவல் மாதத்துக்கான பிறை தென்பட்டதால் தமிழகம் முழுவதும் நாளை (ஏப்ரல் 22) ரமலான் பண்டிகை கொண்டாடலாம் என தமிழ்நாடு அரசின் தலைமை காஜி முகமது சலாவுதீன் ஆயூப் அறிக்கை வெளியிட்டுள்ளார்.