ஏப்ரல்.15
இந்தியாவில் உள்ள பல்வேறு ஆயுப்படைகளில் பணிபுரிவதற்காக நடத்தப்படும் சி.ஏ.பி.எப் தேர்வு, தமிழ் உள்ளிட்ட 17 மொழிகளில் நடத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார்.
இந்தியாவில் சிஆர்பிஎப், சிஐஎஸ்எப், அசாம் ரைபிள்ஸ் உள்ளிட்ட ஆயுதப்படைகளை உள்ளடக்கிய சி.ஏ.பி.எப். (CAPF) அமைப்பிற்கு ஆண்டுதோறும் எழுத்துத் தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டுவருகிறது. இந்த தேர்வானது இதுவரை இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளில் மட்டுமே நடத்தப்பட்டுவந்தது.
இந்நிலையில், சி.ஆர்.பி.எப் தேர்வை தமிழ் உள்பட பிற மாநில மொழிகளிலும் நடத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அண்மையில் கடிதம் எழுதியிருந்தார்.
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி திமுக இளைஞரணி மற்றும் மாணவர் அணி சார்பில் வரும் 17ம் தேதி சென்னை மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்தத் தேர்வுகள் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், மத்திய ஆயுத போலீஸ் படைகள்( சிஏபிஎப்) தேர்வு ஹிந்தி, ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ் உள்பட 13 மொழிகளில் நடத்தப்படும். நாடு முழுவதும் இந்தி, ஆங்கில மொழிகளுடன் கூடுதலாக 15 மொழிகளில் 2024 ஜனவரி 1ம் தேதி முதல் சிஏபிஎப் தேர்வு நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.