ஆகஸ்டு,06-
தமிழக காங்கிரஸ் தலைவராக நான்கு ஆண்டுகளுக்கு மேல் கே.எஸ்.அழகிரி தொடர்கிறார்.
தமிழ்நாட்டில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாநில காங்கிரஸ் தலைவரை மாற்றுவதை கட்சி மேலிடம் வழக்கமாக வைத்துள்ளது. வழக்கத்துக்கு மாறாக கே.எஸ். அழகிரி, தலைவர் நாற்காலியில் தொடர்ந்து அமர்ந்திருப்பது மூத்த தலைவர்களுக்கு பிடிக்கவில்லை. தலைவர் பதவியை கைப்பற்ற நினைக்கும் சில எம்.பி.க்களும் அதிருப்தியில் இருந்தனர்.மாநிலத் தலைவரை மாற்ற வேண்டும் என்று உரத்த குரலில் ஓங்கி ஒலித்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலர், டெல்லி தலைமைக்கு கடிதம் எழுதினர். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயை நேரில் சந்தித்தும் வலியுறுத்தினர்.இந்த பிரச்சினை குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் ராகுல்காந்தி முன்னிலையில் மல்லிகார்ஜுன கார்கே டெல்லியில் வெள்ளிகிழமை ஆலோசனை நடத்தினார்..
இந்தக் கூட்டத்தில் கே.எஸ்.அழகிரி, மாநில முன்னாள் தலைவர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏ-க்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள் என 73 பேர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. தமிழகத்தில் காங்கிரஸ் பலவீனமாக உள்ளது-அழகிரியை மாற்ற வேண்டும் என சிலர் வலியுறுத்தினர்.
இதனால் ராகுல்காந்தி ஆத்திரம் அடைந்தார்.
‘’தலைவரால் கட்சி பலவீனம் அடைகிறது என்பதை ஏற்க முடியாது- உங்கள் மாவட்டங்களில் காங்கிரஸ் எப்படி இருக்கிறது?கட்சியை பலப்படுத்த நீங்கள் என்ன செய்தீர்கள்?’என ஆவேசமாக ராகுல் கேள்வி எழுப்பினார்.
அழகிரியை மாற்ற வேண்டும் என போர்க்குரல் கொடுத்தவர்கள் ‘கப்சிப்’ ஆனார்கள். அழகிரியை மாற்றி விட்டே ஊர் திரும்புவது என சபதம் செய்து டெல்லிக்கு சென்ற தலைவர்கள், சோகத்துடன் திரும்பியதுதான் மிச்சம்.
000