ஏப்ரல்.18
திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் பயிரிடப்பட்டுள்ள தர்பூசணி, கோடையில் வெயிலால் விளைச்சல் குறைந்துவிட்டதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் மடத்துக்குளம் அதன் சுற்றுப்பகுதியிகளில் கோடை சீசனை கணக்கில்கொண்டு விவசாயிகள் ஆண்டுதோறும் தர்பூசணி சாகுபடி செய்துவருகின்றனர். கிணற்றுபாசனத்தை வைத்து விவசாயிகள் தர்பூசணியை பரவலாக சாகுபடி செய்கின்றனர். தண்ணீர் வீணாவதைத்தடுக்கும் வகையில், தர்பூசணிக்காக பார் எனப்படும் மேட்டுப்பாத்தி அமைத்து, நீர் ஆவியாகாமல் தடுக்க நிலப்போர்வை போர்த்தி அதனுள் விதைகளை நடவு செய்கின்றனர்.
செடிகளின் வேர்களுக்கு போதிய தண்ணீர் கிடைக்கும் வகையில், சொட்டுநீர்ப் பாசன முறையை இப்பகுதி விவசாயிகள் பின்பற்றுகின்றனர். இதனால், ஏக்கருக்கு 20 டன் வரை ஆண்டுதோறும் மகசூல் எடுத்துவருகின்றனர்.
கொரோனா ஊரடங்கு காலத்தில், தர்பூசணியை கொள்முதல் செய்ய ஆளில்லாமல், விளைநிலங்களிலேயே வீணாகி விவசாயிகளுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், நடப்பு சீசனில் தாந்தோணி, துங்காவி மற்றும் உடுமலை வட்டாரத்தில் சில பகுதிகளில் தற்போது தர்பூசணி அறுவடை தொடங்கியுள்ளது.
இந்த தர்பூசணியை, கிலோ, ரூ.12 முதல் 14 ரூபாய் வரை வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். ஆனால், சாகுபடிக்கு ஆன செலவுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், இந்த விலை கட்டுப்படியாகாது என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மேலும், கோடை வெப்பம் அதிகமாக இருப்பதால், இந்த ஆண்டு தர்பூசணி உற்பத்தியும் ஏக்கருக்கு 2 டன் அளவுக்கு சரிந்துவிட்டதாகத் தெரிவிக்கின்றனர். கோடை சீசனில் மட்டுமே வருமானம் கிடைக்கக் கூடிய இந்த தர்பூசணிக்கு உரிய விலை கிடைத்தால் மட்டுமே இந்த நஷ்டத்தில் இருந்து தப்பிக்க முடியும் என்கின்றனர் உடுமலை பகுதி சாகுபடியாளர்கள்.