பருவமழையால் டெல்லி, இமாச்சலபிரதேசம், ஹரியானா, பஞ்சாப், உத்தரகாண்ட், உத்தரபிரதேசம் ஆகிய 6 மாநிலங்கள் நிலைகுலைந்து போயுள்ளன.
இமாச்சலபிரதேசத்தில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவினால் ஏராளமான சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.42 பேர் இறந்து போனார்கள்.
டெல்லியில் வெளுத்து வாங்கிய மழையால் தலைநகரம் வெள்ளத்தில் மிதக்கிறது.கடந்த 45 ஆண்டுகளுக்குப்பின் யமுனை ஆற்று நீரின் அளவு 208 மீட்டரை தாண்டியுள்ளது. முதல்-அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது.உச்ச நீதிமன்றம் போன்ற முக்கிய இடங்களுக்குச் செல்லும் சாலைகளும் தண்ணீரால் சூழப்பட்டு இருக்கிறது
டெல்லியில் தற்போது மழை குறைந்து விட்டது.ஆனால் ஹரியானாவில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரால் யமுனை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தாழ்வான பகுதிகள் நீரில் மிதக்கின்றன.குடியரசு தின அணிவகுப்பு நடைபெறும் ராஜ்காட் போன்ற இடங்களையும் வெள்ளம் சூழ்ந்து இருக்கிறது.
யமுனை நதி தண்ணீர் செங்கோட்டை சுவர்களை தொட்டுச்செல்கிறது.அந்த பகுதி தனித்தீவாக காட்சிஅளிக்கிறது. தண்ணீர் சுத்திகரிப்பு ஆலைகள் வெள்ளத்தில் மிதப்பதால் அவை மூடப்பட்டுள்ளன.இதனால் டெல்லியில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள், கல்லூரிகளுக்கு சனிக்கிழமை வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.தனியார் நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இருப்பு பாதைகளில் வெள்ள நீர் தேங்கி இருப்பதால் 700 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
நல்ல நாளிலேயே டெல்லியில் போக்குவரத்து நெரிசல் மூக்கு முட்டும். இப்போது நிலைமை இன்னும் மோசமாகி இருக்கிறது.
ஹரியானாவில் உள்ள கதியால் பகுதிக்கு ஆளும் ஜனநாயக் ஜனதா கட்சி எம்.எல்.ஏ.ஈஸ்வர் என்பவர் வெள்ளப்பகுதியை பார்வையிட போனார். லேட்டாக வந்ததாக திட்டி அவரை பெண் ஒருவர் கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லியில் கடந்த இரண்டு நாட்களாக மழை இல்லை. யமுனையின் நீர்மட்டம் குறைந்து வெள்ளம் வடிந்து இயல்பு நிலை திரும்ப ஒரு வாரம் ஆகலாம்.
000