செப்டம்பர்,02-
ஓவியத்துக்கும்,சிற்பத்துக்கும் விழிகள் எவ்வளவு முக்கியமோ அது போல் திரைப்படங்களுக்கு ‘டைட்டில்’ பிரதான அம்சம்.பொறுக்கி பொறுக்கி அந்த காலத்தில் தலைப்பை தேர்வு செய்தார்கள், இயக்குநர்கள்.
இப்போதைய இயக்குநர்கள் பொறுக்கி டைட்டிலை தேர்ந்தெடுக்காவிட்டாலும் பரவாயில்லை.அடுத்தவர்கள் வைத்த டைட்டிலை கொஞ்சம் கூட ‘ லஜ்ஜை’ இல்லாமல் தங்கள் படங்களுக்கு சூட்டிக்கொள்கிறார்கள்.
தொழில் நுட்பத்தில் பல்வேறு புரட்சிகளை அறிமுகம் செய்த கமல்ஹாசனும் இதற்கு விதி விலக்கல்ல. டெக்னிக்கல் விஷயங்களை எல்லாம் அலசி ஆராய்ந்து, குள்ள வேடத்தை கண்டு பிடித்த கமல் , தனது சொந்த படத்துக்கு, தமிழ் சினிமா தோன்றிய காலத்தில் வெளியான‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தின் பெயரையே தலைப்பாக வைத்தார்.
ரஜினியின் பொல்லாதவன், மாப்பிள்ளை ஆகிய தலைப்புகளை அவரது சொந்த மாப்பிள்ளை தனுஷ் சுவீகாரம்
எடுத்துக்கொண்டார். சில பழைய படங்களின் தலைப்புகளை கையாள நினைத்தபோது வம்பில் மாட்டிக்கொண்டார். திருவிளையாடல் என தனது படத்துக்கு தலைப்பிட்டு தனுஷ் நடிக்க, சிவாஜி ரசிகர்கள் கொந்தளித்தனர். அதன் பிறகே‘நவீன திருவிளையாடல்’ என டைட்டிலை மாற்றினார்கள். எனினும் இன்னொரு படத்துக்கு சிவாஜியின் உத்தமபுத்திரன் டைட்டிலை களவாடிக்கொண்டார்.
விஜய் நடித்த காவலன் படத்துக்கு முதலில் வைத்த பெயர் காவல்காரன். எம்.ஜி.ஆர்.நடித்த காவல்காரன் படத்தின் தயாரிப்பாளர், அந்த டைட்டிலை கொடுக்க மறுத்து விட்டார்.அதன் பின்னர் காவலன் ஆனார் விஜய்.
’லவ்டுடே’ டைட்டில் விஜயை வைத்து பாலசேகரன் இயக்கிய படம் .சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்து சூப்பர்ஹிட்டான படம். அதனை பிரதீப் ரங்கநாதன் தனது புதிய படத்துக்குசூட்டிக்கொண்டார்.
வடிவேலு நடிக்க லைகா நிறுவனம் தயாரித்த படத்துக்குமுதலில் நாய் சேகர் என டைட்டில் வைக்கப்பட்டது. ஆனால்அதே பெயரில் வேறு ஒருவர் , திரைப்பட தயாரிப்பாளர் யூனியனில் பதிவு செய்து வைத்திருந்தார். டைட்டிலை கொடுக்க அவர் மறுத்ததால் ‘ நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’என புதுப்பெயர் சூட்டி, படத்தை ரிலீஸ் செய்தது, லைகா.
இந்த வழக்கம் இன்று வரை தொடருகிறது.நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியான ஒரு படத்தின் பெயர்’லக்கிமேன்’. யோகிபாபு நடித்துள்ளார். அடுத்த வாரம்வெளியாக இருக்கும் இன்னொரு படத்தின் பெயர் ‘துடிக்கும்கரங்கள்’. இரண்டுமே பழைய படங்களின் டைட்டில் எனசொல்லத்தேவை இல்லை.தமிழ் சினிமாவில் கதைக்குத்தான் பஞ்சம்
என்கிறார்கள்.டைட்டிலுக்கும் பஞ்சமா?
000