ஜுலை,04- தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மருத்துவத்துறையில் பல பிரச்சினைகள் கொழுந்துவிட்டு எரியும்போது, சுட்டிக்காட்டும் தவறுகளை திருத்திக்கொள்ளும் எண்ணம் சுகாதார அமைச்சருக்கு இல்லை என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட ஒன்றரை வயது குழந்தையின் வலது கை அகற்றப்பட்ட விவகாரத்தில் சுகாதாரத்துறைக்கு கண்டனங்களைக் குவித்து வருகிறது. சேலத்தில் நேற்று முன் தினம் ( ஞாயிற்றுக் கிழமை ) பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி அரசு மருத்துவமனைகளில் நிகழும் தவறுகளை சரி செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். இதற்கு சென்னையில் பதிலளி்த்த சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், எடப்பாடியை விமர்சனம் செய்வது போன்ற கருத்துகளைத் தெரிவித்து இருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள எடப்பாடி பழனிசாமி,அரசு மருத்துவமனைகளில் முறையாக சிகிச்சை அளிக்கப்படாததுடன், போதிய மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் இல்லாத நிலை உள்ளதாக தெரிவித்து இருக்கிறார். மேலும், கடந்த 2 ஆண்டுகளில் என்ன காரணத்தினாலோ தமிழ்நாடு மருத்துவக் கழகத்தின் மூலம் மருந்துகளை கொள்முதல் செய்யாமல், உள்ளூர் கொள்முதல் மட்டுமே செய்வதாக தகவல் வெளியாவதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஒன்றரை வயது குழந்தை கையை இழந்தது, சளி தொல்லைக்கு நாய்க்கடி ஊசி செலுத்தியது உள்ளிட்ட நிகழ்வுகளையும் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ள எதிர்க்கட்சித் தலைவர், ஒரு கையை இழந்த ஒன்றரை வயது குழந்தைக்கு இனியாவது முறையான சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் தவறிழைத்த மருத்துவப் பணியாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது..
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதியைச் சேர்ந்த முகமது தஹீர் என்கிற குழந்தை குறை மாதத்தில் பிறந்துள்ளார். அவருக்கு இருதயத்தில் கோளாறு, மூளையில் நீர்க்கசிவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் இருந்துள்ளது. அதனுடன் பிறக்கும்போதே சாதாரண குழந்தையை விட 1. 5 கிலோ என்கிற பாதி எடையில் இருந்துள்ளார்.
மூளை பிரச்சனை காரணமாக தேவகோட்டையில் இருந்து பலமுறை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்றுள்ளார் அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பாக குழந்தைக்கு உடலில் ஸ்டண்ட் கருவி பொருத்தப்பட்டுள்ளது. அந்த கருவி கடந்த மாதம் ஐந்தாம் தேதி மலத்துளையின் வழியாக வெளியே வரவே அந்த சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
ஒன்றாம் தேதி குழந்தையின் கையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தையின் கையில் ரத்தக்குழாய் அடைப்பு இருப்பதால் கையை அகற்றினால் தான் உயிர் பிழைக்க முடியும் என்கிற நிலை உருவாகியுள்ளது அதனால் கையை அகற்றி மருத்தவர்கள் குழந்தையின் உயிரைக் காப்பாற்றியுள்ளனர் .
குழைந்தைக்கு ஏற்பட்ட பாதிப்பை கண்டறிய பெற்றோர்களின் சார்பில் அவர்கள் மூலமே பரிசோதனை செய்து கொள்ளட்டும், அதற்கான செலவை அரசே ஏற்கும். ஆனால் அரசு மருத்துவமனையில் அலட்சியம் என்ற முறையில் குறை கூறுவது தவறு. அரசு மருத்துவமனை என்றாலே ஏதோ சலுகை கிடைக்கும் என சிலர் நினைக்கின்றனர்.
குழந்தை இறந்து விட்டது போன்று எதிர்க்கட்சித் தலைவர் பேட்டியளிக்கிறார், மக்கள் சேவை ஆற்றிக் கொண்டிருக்கின்ற சுகாதாரத் துறைக்கு களங்கம் ஏற்படுத்துகின்ற செய்திகளை பரப்புவதை தவிர்க்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரை கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இதனிடையே குழந்தையின் பெற்றோர் தவறான சிகிச்சையால் தங்கள் குழந்தையின் கை அகற்றக் காரணமாக இருந்தவர்கள் மீது நடடிவடிக்கை கோரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்து உள்ளனர்.
000