ஏப்ரல்.18
திருப்பூர் அருகே தாராபுரத்தில் மதுவிலக்கு போலீசார் நடத்திய வாகன சோதனையின்போது, காரில் கடத்திவரப்பட்ட 5.50 லட்சம் மதிப்புள்ள 45 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வாழப்பாடியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே மதுவிலக்கு காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக டாடா இண்டிகா என்ற வாகனத்தில் வந்த நபரிடம் போலீசார் விசாரணை செய்தனர். அவர் முன்னுக்கு பின்னாக பதில் அளித்தால், சந்தேகம் அடைந்த மதுவிலக்கு காவல்துறையினர், அவரை காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். அப்போது, அவர், தமது காரில் சுமார் 45 கிலோ அளவுள்ள 5.50 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது.
கஞ்சாவை மொத்தமாக வாங்கி விற்பனைக்காக இவர் கொண்டு சென்றதும், சிக்கிய நபர், வாழப்பாடியைச் சேர்ந்த சேகர் மகன் தமிழ்ச்செல்வன் என்பதும் உறுதியானது. இதையடுத்து, கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டாட்டா இன்டிகா கார் மற்றும் 45 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து காவல்துறையினர் தமிழ்ச்செல்வனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.