தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, திமுகவில் புதிதாக ஒரு கோடி உறுப்பினர்களைச் சேர்க்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திமுகவின் முன்னாள் தலைவரும், மறைந்த முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, திமுக-வில் ஒரு கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்க கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, இன்று (ஏப்ரல் 3ம் தேதி) முதல் ஜுன் மூன்றாம் தேதி வரை “உடன்பிறப்புகளாய் இணைவோம்” என்ற திட்டத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் ஒரு கோடி புதிய உறுப்பினர்களை, அந்தந்த மாவட்டச் செயலாளர்கள், துண்டறிக்கை, திண்ணை பிரச்சாரங்கள் மூலமாகவும், முக்கிய இடங்களில் முகாம் அமைத்தும், வீடு தோறும் தேடி சென்றும் திமுகவில் இணைக்க வேண்டும் என்றும் அந்தக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
இதற்கான வழிகாட்டு நெறிமுகளை திமுக சார்பில் கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் ஏற்கனவே வெளியிட்டிருந்தார். இந்நிலையில், அறிவித்தபடி 1 கோடி புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் இந்தத் திட்டத்தினை இன்று திமுகவின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திரு.வி.க., குடியிருப்பில் தொடங்கி வைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கேரளாவில் நடைபெற்ற வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழாவில் பங்கேற்றதோடு, மேலும் பல நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுவருவதால், அவருக்கு ஓய்வு தேவைப்படுவதாகவும், எனவே, இன்று காலை சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிகழ்ச்சியும், காலை 11 மணி அளவில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த திமுகவில் 1 கோடி உறுப்பினர்களைச் சேர்ப்பதற்கான தொடக்க நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.