கும்மிடிப்பூண்டி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. வேணு இல்லத் திருமண விழாவை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையில் கலைஞர் அரங்கத்தில் நடத்தி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது..
எதிர்க்கட்சியாக இருந்தபோது தைரியமாக செயல்பட்டோம். ஆளுங்கட்சியாக இருக்கும்போது நல்லதை கூட ஜாக்கிரதையாக பொறுமையாக பலமுறை யோசித்து சிந்தித்து செய்ய வேண்டிய நிலை உள்ளது.
வரலாறு நிறைய பேருக்கு புரியவில்லை. நாட்டின் பிரதமராக இருப்பவருக்கே வரலாறு தெரியவில்லை.
அண்ணாவால் கலைஞரால் பாதுகாக்கப்பட்ட இயக்கம் தான் திமுக என்ற குடும்பம். அண்ணா, திமுகவை தொடங்கிய போது எல்லோரையும் தம்பி என்று என்றுதான் அழைத்தார். கலைஞரும் கட்சித் தொண்டர்களை மட்டும் அல்லாமல் தமிழகத்தில் உள்ள அத்தனை பேரையும் உடன் பிறப்புகளே என்று தான் அழைத்தார்.
திமுக பல்வேறு நேரங்களில் மாநாட்டை நடத்துகிறது. அந்த மாநாட்டிற்கு குடும்பம் குடும்பமாக வாருங்கள் என்றுதான் தலைவர் கலைஞர் அழைப்பார்
போராட்டங்களிலும் குடும்பம் குடும்பமாக பங்கேற்று சிறை சென்று பல கொடுமைகளை அனுபவித்தவர்கள் தான் திராவிட இயக்கத்தினர்.
பிரதமர் மோடி இரண்டு நாட்களுக்கு முன்பு திமுக குடும்ப அரசியல் நடத்தி வருவதாக பேசி இருக்கிறார்.பிரதமர் பேசியது உண்மைதான். திமுகவில் குடும்பம் குடும்பமாக அரசியல் செய்து வருகிறோம்.பிரதமருக்கு நாம் நன்றி தெரிவிக்க வேண்டும்
மேலும் மோடி, திமுகவுக்கு வாக்களித்தால் கருணாநிதியின் குடும்பம் தான் வளர்ச்சி அடையும் என்று பேசி இருக்கிறார். கருணாநிதியின் குடும்பம் என்பது தமிழ்நாடு தான், தமிழர்கள் தான். நவீன தமிழ்நாட்டை உருவாக்கியவர் கலைஞர் தான்.
மத்தியில் ஆட்சி செய்யக்கூடிய பாஜக ஆளும் மாநிலந்தான் மணிப்பூர். அங்கு கலவரம் நடக்கிறது. ஆனால் பிரதமர் மணிப்பூர் மாநிலத்திற்கு செல்லவில்லை. அந்த மாநிலப் பிரச்சினைக் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட 50 நாட்களுக்குப் பிறகு நடத்துவது ஏன் ?
பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு பிறகு பிரதமர் மோடி அச்சமடைந்துள்ளார்.. பொது சிவில் சட்டம் குறித்து அவர் பேசுகிறார். நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர் குலைத்து மதக்கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கருதுகிறார்கள். ஒரு நாட்டில் இரண்டு சட்டங்கள் இருக்கக் கூடாது என்கிறார் பிரதமர் மோடி
மதப் பிரச்சனையை அதிகமாக்கி நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி வெற்றி பெற்று விடலாம் என்று பிரதமர் கருதுகிறார். நான் உறுதியோடு சொல்கிறேன் நிச்சயமாக வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு சரியான பாடத்தை மக்கள் வழங்குவதற்கு தயாராக இருக்கிறார்கள்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
000