செப்டம்பர்03-
ஆளும் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் வடிவமைத்துள்ள‘இந்தியா’ கூட்டணி கட்சி தலைவர்களின் 3 வது ஆலோசனை கூட்டம் மும்பையில் நடந்து முடிந்துள்ளது. ‘தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை தோழமை கட்சிகள் ஓரிரு வாரங்களில் முடிக்க வேண்டும்’ என இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மே.வங்காளம், டெல்லி, பஞ்சாப் ஆகிய மாநிலங்களைத்தவிர மற்ற மாநிலங்களில் தொகுதி பங்கீட்டில் பிரச்சினை இருக்காது.தமிழ்நாட்டில் தொகுதி பங்கீடு ஒரு சம்பிரதாயமாகவே இருக்கும்.கடந்த தேர்தலில் கொடுக்கப்பட்ட தொகுதிகளையே வரும் தேர்தலிலும் கூட்டணி கட்சிகளுக்கு திமுக பிரித்து வழங்கும் என தெரிய வந்துள்ளது..
கடந்த தேர்தலில் திமுக 20 இடங்களில் போட்டியிட்டது. 10 தொகுதிகள் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2, விடுதலை சிறுத்தைகளுக்கு 2 இடங்கள் அளிக்கப்பட்டது.முஸ்லிம் லீக், ஐ.ஜே.கே. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது.
தேனி தொகுதியில் மட்டும் காங்கிரஸ் தோற்றுப்போனது.மற்ற அனைத்து இடங்களையும் திமுக கூட்டணி அள்ளியது. அதாவது மொத்தம் போட்டியிட்ட 39 இடங்களில் ‘இந்தியா’ கூட்டணி 38 இடங்களில் வாகை சூடியது. வரும் தேர்தலிலும் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்ற 18 தொகுதிகளை அப்படியே கூட்டணி கட்சிகளுக்கு திமுக கொடுத்து விட்டு, தாங்கள் வென்ற 20 இடங்களை எடுத்துக்கொள்ளும்.
இந்த முறை பாரிவேந்தர் தலைமையிலான ஐ.ஜே.க.கட்சி, பாஜக கூட்டணிக்கு சென்றுள்ளது.எஞ்சிய கட்சிகள் அனைத்தும் ’இந்தியா’ அணியில் தான் உள்ளது.இந்த அணியில் புதிதாக கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சேருவதற்கு வாய்ப்புகள் உள்ளது.ஐ.ஜே.கே.வெளியேறி விட்டதால் ,எஞ்சி இருக்கும் ஒரு தொகுதி கமலுக்குவழங்கப்படும்.
எனவே தமிழ்நாட்டில் ‘இந்தியா’கூட்டணியின் தொகுதி பங்கீடு முடிந்து விட்டதாகவே கருதலாம். ‘அண்ணா அறிவாலயம்’ ஹவுஸ்புல் ஆகி விட்டது என்பதே உண்மை.
000