ஜுலை,25-
’நெல்லை எனக்கு தொல்லை’ என திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி அடிக்கடி சலித்துக்கொள்வார். நெல்லையிலிருந்து பிரிந்து உருவான தென்காசியும்,திமுகவுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
என்ன காரணம்?
தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்த செல்லத்துரை சில மாதங்களுக்கு முன்பு,கட்சித் தலைமையால் நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜா, மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டார் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துசெல்லத்துரை ஆதரவாளர்கள் சென்னை அண்ணா அறிவாலயம் முன் ரகளையில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.
அப்போது முதல் உள்கட்சி பூசல், பொதுவெளியிலும் அடிக்கடி வெடித்து வருகிறது. உச்சக்கட்டமாக ,தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சிவ பத்மநாபனுக்கும், செல்லத்துரை ஆதரவாளரான மாவட்ட ஊராட்சித் தலைவர் தமிழ்செல்விக்கும் இடையே, பொதுமக்கள் மத்தியில் நிகழ்ந்த வாக்குவாதமும், தகராறும் மாவட்டத்தில் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து தென்காசியில் திமுக மகளிரணி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிவ பத்மநாபனும், அவரது அரசியல் எதிரி தமிழ்செல்வியும் பங்கேற்றனர்.
தமிழ்செல்வியை மேடையில் பேசவிடாமல் சிவ பத்மநாபன் தடுத்து மைக்கை பறித்தார். இதனால் மேடையில் தள்ளுமுள்ளு, மோதல் ஏற்பட்டது. சிவ பத்மநாபனும், தமிழ்செல்வியும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
‘தென்காசியிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.மணிப்பூர் பத்தி பேச வந்துட்டாங்க..’என கொதித்த தமிழ்செல்வி. மாவட்ட செயலாளரை ஒருமையில் பேசினார்.தமிழ்செல்வியின் ஆதரவாளர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த மோதல் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது. இதற்கிடையே தனக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு மாவட்ட ஆட்சித்தலைவருக்கு தமிழ்செல்வி மனு அனுப்பியுள்ளார்