கோடை விடுமுறையின் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் திரளாக காணப்படுகிறது.
உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் சாமி தரிசனம் செய்வது வழக்கம். தற்போது கோடை விடுமுறை என்பதால் நாடு முழுவதிலும் உள்ள பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர். இதன் காரணமாக திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய சாமானிய பக்தர்களுக்கு முன்னுரிமை வழங்க தேவஸ்தானம் முடிவெடுத்துள்ளது. கோடைகால ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் திருப்பதி அன்னம்மையா பவனில் நடைபெற்றது. இதற்கு தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மாரெட்டி தலைமை வகித்த நிலையில், அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
கோடை காலம் என்பதால் திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது என்றும் வருகிற ஜூலை மாதம் இறுதி வரை கூட்டம் கட்டுக்கடங்காமல் வர வாய்ப்புள்ளது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அதிகாரிகள் யாரும் விடுப்பு எடுக்காமல் பணியாற்ற வேண்டும். தேவைப்பட்டால் திருப்பதியில் மேலும் சில கோவில்களில் பணியாற்றும் அதிகாரிகள் தற்காலிகமாக திருமலைக்கு வந்து பணியாற்றலாம் என்றும் இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கோவிலுக்குள் உள்ள வெள்ளி வாசலுக்கும், தங்க வாசலுக்கும் இடையே கூட்ட நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. கோடையில் சாமானிய பக்தர்கள் அவதிப்படக்கூடாது . சாமி தரிசனத்தில் சாமானிய பக்தர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் போலீசார் போக்குவரத்து கூட்ட நெரிசல் ஏற்படாதவாறு செயல்பட வேண்டும் என்று இக்கூட்டத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.